கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சையில் தோற்றவுள்ள மாணவர்களுக்காக மாத்திரம் நாளை முதல் மேல்மாகாணத்திலுள்ள பாடசாலைகள் திறக்கப்படவுள்ளன.
கல்வியமைச்சு இதனை தெரிவித்துள்ளது.
நாட்டின் ஏனைய பகுதிகளில் பாடசாலைகள் திறக்கப்பட்டுள்ள போதிலும் கொவிட்-19 பரவலுடன் மேல்மாகாணத்திலுள்ள அனைத்து பாடசாலைகளும் மூடப்பட்டன.
எனினும், கல்விப்பொதுத்தராதர சாதாரண தர மாணவர்களை இலக்கு வைத்து மாத்திரம் நாளை முதல் மேல்மாகாணத்தில் உள்ள பாடசாலைகளை திறக்க கல்வியமைச்சு தீர்மானித்துள்ளது.
இதன்படி மேல்மாகாணத்திலுள்ள 11 கல்வி வலயங்களுக்கு உட்பட்ட ஆயிரத்து 576 பாடசாலைகளில் நாளை முதல் 907 பாடசாலை மாத்திரம் 11ம் தர மாணவர்களுக்காக திறக்கப்படவுள்ளதாக அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இந்தநிலையில் சமூக இடைவெளி பேணப்படுகின்றதா? இல்லையா? என்பது தொடர்பில் காவற்துறை விஷேட அவதானம் செலுத்தவுள்ளது.
காவற்துறை ஊடகப் பேச்சாளரும் பிரதி காவற்துறை மா அதிபருமான அஜித் ரோஹன இதனை தெரிவித்துள்ளார்.
சுகாதார நடைமுறைகளை பின்பற்றாது பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக பொது போக்குவரத்தின் போது வழங்கப்படும் சுகாதார நடைமுறைகளை பின்பற்றாதவர்கள தொடர்பில் விஷேட சுற்றி வளைப்புக்களை முன்னெடுக்கவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
கொவிட்-19 இரண்டாம் அலையுடன் தற்காலிகமாக மட்டுப்படுத்தப்பட்ட தொடருந்து போக்குவரத்து சேவைகள் நாளை முதல் வழமைப்போல இடம்பெறவுள்ளன.
தொடருந்து பொதுமுகாமையாளர் டிலன்த பெர்னாண்டோ இதனை தெரிவித்துள்ளார்.
இதன்படி நாளை முதல் 390 தொடருந்து சேவைகள் இணைத்து கொள்ளப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.