யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெற்று வந்த ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து, அந்த விடுதியில் கடமையாற்றிய வைத்தியர்கள், தாதியர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு வந்திருந்த ஒருவருக்கே தொற்று உறுதி செய்யப்பட்டது.
அவருக்கு கொழும்பில் பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட போது தொற்று அடையாளம் காணப்படவில்லை. யாழ்ப்பாணத்தில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இவர் வைத்தியசாலையின் 3ஆம் இலக்க விடுதியில் தங்கி சிகிச்சை பெற்று வந்தார். அங்கு கடமையாற்றிய வைத்தியர்கள், தாதியர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இவர்கள் வைத்தியசாலையின் அருகில் உள்ள விடுதி ஒன்றில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இதேவேளை, வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெற்று வந்த இன்னொருவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், முடிவெடுக்க முடியாத நிலைமை தென்பட்டதாகவும், அவருக்கு மீண்டும் நாளை பரிசோதனை மேற்கொள்ளப்படுமென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.