தற்போது இலங்கையில் தமிழர்களான மனிதர்கள் மாத்திரமல்ல தமிழர்களின் கால்நடைகள் கூட வாழமுடியாத சூழ்நிலையே ஏற்பட்டுள்ளது என தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் தவராஜா கலைஅரசன் தெரிவித்தார் .
திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவில் இடம்பெற்ற வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கும் நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இந்நிகழ்வில் திருக்கோவில் பிரதேச சபை தவிசாளர் கமலராஜன், திருக்கோவில் பிரதேச சபை உறுப்பினர்கள், கட்சியின் ஆதரவாளர்களும் கலந்து கொண்டனர்.
இதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
இந்நாட்டின் அரசாங்கத்தின் நிலைப்பாட்டைப் பாரக்கின்ற போது தமிழ் மக்கள் இந்த நாட்டில் வாழலாமா? என்ற ஐயப்பாடு எழுகின்றது. ஏனெனில் உலகநாடுகள் அனைத்தும் உலகம் பூராகவும் தீவிரமடைந்து வரும் கொரோனா நோயினை எவ்வாறு ஒழிக்கலாம் என்று அல்லும் பகலுமாக உழைத்து கொண்டிருக்கும் இக் காலகட்டத்தில் இலங்கை அரசு மாத்திரம் வடகிழக்கு பிரதேசங்களில் எவ்வாறு தமிழர்களை அடக்க முடியும், தமிழர்களுடைய நிலங்களை எவ்வாறு ஆக்கிரமிக்க முடியும் என்ற வகையில் தான் தன் செயற்பாட்டை முன்னெடுத்து வருகின்றது. அதிலும் கிழக்கில் பலமுனை முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இச் செயற்பாடுகள் நாட்டில் ஆரோக்கியமான சூழலை உருவாக்குவதற்கான விடயமாக இல்லை. மாறாக தமிழர்களின் நிலங்களை எவ்வாறு கையகப்படுத்தலாம், தமிழர்களை அவர்களது பூர்வீக இடங்களில் இருந்து வெளியேற்றலாம் என்ற திட்டத்தை அரசாங்கம் கட்சிதமாக மேற்கொண்டு வருகின்றது. இவை நிறுத்தப்பட வேண்டும்.
இன்று நேற்றல்ல அறுபது வருடங்களுக்கு மேலாக இந்த நாட்டில் சொல்ல முடியாத வடுக்களைத் தொடர்ச்சியாக அனுபவித்த தமிழர்களின் வாழ்விடங்களை அகற்றுவதற்கும், ஆலயங்களை கையகப்படுத்துவதற்கும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.
இன்று தமிழர்களான மனிதர்கள் மாத்திரமல்ல தமிழர்களின் கால்நடைகள் கூட இலங்கையில் வாழமுடியாத சூழ்நிலையே ஏற்பட்டுள்ளது. குறிப்பாக மயிலத்தமடு மேச்சற்தரையில் மேய்ச்சலுக்காக விடப்பட்ட கால்நடைகள் கூட ஈவிரக்கமற்ற முறையில் அண்மைக் காலமாக கொல்லப்படுகின்றது. இவ்வாறு ஈவிரக்கமற்ற முறையில் அராஜக அரசு செயற்படுகின்றது.
தற்போது அரசியல் ரீதியாக பின்னடைவைச் சந்தித்து வரும் இந்த அரசு சிங்கள மக்கள் மத்தியில் தமிழ் மக்களுக்கு இவ்வாறான நிலை எமது அரசினால் மேற்கொள்ளப்படுகின்றது என்ற விடயங்களை சொல்லி பெரும்பான்மை சமூகத்தின் மத்தியில் தமக்கான ஆதரவினை பெருக்கி கொள்ள முனைகின்றதா? என்ற கேள்வியும் எமக்கு எழுகின்றது.
இந்த அரசாங்கம் இவ்வாறான விடையங்களை நிறுத்தி சமத்துவமான முறையில் மக்களை ஒன்றிக்கும் பணிகளை முன்னெடுக்க வேண்டும்.
ஐக்கிய நாடுகள் சபை கூட இலங்கை அரசை மிக வன்மையாக கண்டித்துள்ளது. இந் நிலை தொடருமானால் நாட்டில் மிக மோசமான சூழல் ஏற்படும் என்று தெரிவித்தார்.