துருக்கியில் அண்டை வீட்டு இளைஞரால் தமது பெற்றோர் சரமாரியாக சுட்டுக்கொல்லப்படுவதை 11 வயது சிறுவன் நேரிடையாக பார்த்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
துருக்கியின் கொன்யா நகரிலேயே குறித்த அதிர்ச்சி சம்பவம் ஜனவரி 21 ம் திகதி அரங்கேறியுள்ளது.
குறித்த சம்பவத்தில் 39 வயதான கோன்கா பெக்சன் மற்றும் அவரது கணவர் 40 வயதான அப்துல்லா கோகக் ஆகியோர் தங்களின் குடியிருப்புக்கு முன்பு வைத்து இளைஞர் ஒருவரால் சரமாரியாக சுட்டுக்கொல்லப்பட்டனர்.
இச்சம்பவத்தில் 11 வயதேயான இஸ்மாயில் கோகக் நேரடி சாட்சியாக மாறியுள்ளான். தமது பெற்றோர் துப்பாக்கி குண்டு காயங்களுடன் உயிர் தப்பியதாகவே சிறுவன் இன்னமும் கருதுவதாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஓஸ்கான் கேன் அளித்த வாக்குமூலத்தில், தமது முன்னாள் மனைவியான நாதிரே, சுமார் ஓராண்டு முன்னர் அப்துல்லா கோகக் உடன் முறைதவறிய தொடர்பில் இருந்து வந்ததாகவும்,
இவர்கள் தொடர்பில் ஆபாச புகைப்படம் ஒன்று தம்மிடம் சிக்கிய பின்னர் மனைவியான நாதிரேவை தாம் விவாகரத்து செய்ததாகவும் ஓஸ்கான் தெரிவித்துள்ளார்.
ஆனால் விவாகரத்து பெற்ற பின்னர் குறுகிய காலத்தில் இருவரும் மீண்டும் சேர்ந்து வாழ தொடங்கியுள்ளனர்.
இதனிடையே அப்துல்லாவின் குடும்பம் ஓஸ்கானின் வாக்குமூலத்தை முற்றாக நிராகரித்ததுடன், நாதிரேவும் அப்துல்லாவும் சிறுவயதில் இருந்தே நண்பர்கள் எனவும் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக, தமது மனைவியை கேவலமாக பேசியதாலையே அப்துல்லாவையும் மனைவியையும் சுட்டுக்கொன்றதாக கூறிய ஓஸ்கான்,
தம்மால் அதை தாங்கிக்கொள்ள முடியவில்லை என்பதாலையே, இருவரையும் சரமாரியாக சுட்டுக்கொன்றதாக தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.