அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1 லட்சத்து 15 ஆயிரம் பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்கா, கொரோனாவின் கோரப்படியில் சிக்கி தவித்து வருகிறது. கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி ஒருபக்கம் போடப்பட்டு வந்தாலும், மறுபக்கம் தொற்று பரவல் வேகமாக உள்ளது.
இந்த நிலையில், அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 1 லட்சத்து 15 ஆயிரம் பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் இதுவரை கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 2 கோடியே 61 லட்சத்து 30 ஆயிரத்து 188- ஆக உள்ளது. தொற்று பாதிப்பால் இன்று மேலும் 2,900 பேர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளனர்.
கொரோனா பாதிப்பால் இதுவரை மரணமடைந்தவர்கள் எண்ணிக்கை 4 லட்சத்து 38 ஆயிரத்து 508- ஆக உயர்ந்துள்ளது.
இதனிடையே, தடுப்பூசி செலுத்தும் பணியை விரைவு படுத்தும் விதமாக கூடுதலாக 20 கோடி தடுப்பூசிகளை வாங்க முடிவு செய்துள்ளதாக ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் பைசர் நிறுவனம் தயாரித்துள்ள தடுப்பூசியும், மாடர்னா நிறுவனம் தயாரித்துள்ள தடுப்பூசியும் பயன்பாட்டில் உள்ளது.
புதிய ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள ஜோ பைடன் தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை இன்னும் தீவிரமாக செயல்படுத்த நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
அந்த வகையில் தனது பதவி காலத்தின் முதல் 100 நாட்களில் 10 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்த அவர் இலக்கு நிர்ணயித்து உள்ளார்.
இந்த நிலையில் தடுப்பூசி செலுத்தும் பணியை விரைவு படுத்தும் விதமாக கூடுதலாக 20 கோடி தடுப்பூசிகளை வாங்க முடிவு செய்துள்ளதாக ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
மேலும் தற்போதைய தடுப்பூசி வழங்கல் மற்றும் உற்பத்தி திட்டங்களை மறு ஆய்வு செய்த பின்னர் அனைத்து மாகாணங்களுக்கும் வாராந்திர தடுப்பூசி வினியோகத்தை 86 லட்சத்தில் இருந்து 1 கோடியாக உயர்த்தியுள்ளதாகவும் ஜோ பைடன் குறிப்பிட்டுள்ளார்.
பைசர் மற்றும் மாடர்னா நிறுவனங்களிடம் இருந்து தலா 10 கோடி வீதம் கூடுதலாக 20 கோடி தடுப்பூசிகளை வாங்குவது விரைவில் உறுதிப்படுத்தப்படும் என்று கூறிய ஜோ பைடன்,
இந்த ஆண்டு கோடை கால இறுதிக்குள் 30 கோடி அமெரிக்கர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டிருக்கும் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.