பருத்தித்துறையில் கஞ்சா போதைப்பொருள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்து வீடொன்றை சிறப்பு அதிரடிப் படையினர் சுற்றிவளைத்த நிலையில் ஏற்பட்ட முறுகலில் இரண்டு பொதுமகன்களும் சிறப்பு அதிரடிப் படை உத்தியோகத்தரும் காயமடைந்துள்ளனர்.
சம்பவத்தில் காயமடைந்த ஆண் குடும்பத்தலைவர் ஒருவரும் குடும்பப்பெண் ஒருவரும் மந்திகை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
வெட்டுக்காயத்துக்கு உள்ளாகிய சிறப்பு அதிரடிப் படை உத்தியோகத்தர் பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் இன்று அதிகாலை பருத்தித்துறை தும்பளை எல்லை வீதியில் உள்ள வீடொன்றில் இடம்பெற்றது என்று பொலிஸார் தெரிவித்தனர்.
விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலொன்றை தொடர்ந்து இன்று அதிகாலை வீட்டை சுற்றிவளைத்தனர்.
வீட்டுக்குள் கஞ்சா இருப்பதாக தெரிவித்து சோதனையிட அதிரடிப்படையினர் முயன்ற போது, வீட்டிலிருந்தவர்கள் அதற்கு அனுமதிக்கவில்லை. இதனால் வாய்த்தர்க்கமாகி, தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
நிலமையை கட்டுப்படுத்த அதிரடிப்படையினர் வானத்தை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டனர்.
இந்த மோதலில் காயமடைந்த குடும்ப தலைவரும், குடும்ப பெண்ணும் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வீட்டிலிருந்த ஒருவர் அதிரடிப்படை வீரர் மீது வாள்வெட்டு நடத்தி விட்டு தப்பிச் சென்று விட்டதாகவும், வாள்வெட்டிற்கிலக்கானவர் காயமடைந்த நிலையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாக விசேட அதிரடிப்படையினர் தெரிவித்தனர்.
தமது வாகனமும் சேதமடைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
அந்த வீட்டிலிருந்த இருவர் பருத்தித்துறை பொலிஸ் நிலையம் கொண்டு செல்லப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்படுகிறார்கள்.



















