பிரித்தானியாவில் நியூகாம் நகராட்சி மன்றத்தில் பறக்கவிடப்பட்ட ஸ்ரீலங்கா தேசியக் கொடி அந்த பிரதேசத்தில் வாழும் தமிழ் மக்களின் கடும் எதிர்ப்பால் அகற்றப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஸ்ரீலங்காவின் சுதந்திர தினத்தை முன்னிட்டு நியூகாம் நகரசபையினரால் இந்த கொடி பறக்கவிடப்படிருந்தது. இதனால் மிகவும் வேதனை அடைந்த இலண்டன் வாழ் தமிழர்கள் தமிழ் இளையோர் அமைப்பின் உதவியுடன் மின்னஞ்சல் ஊடாகவும் சமூக வலையத்தளங்கள் ஊடாகவும் தங்கள் எதிர்ப்பைத்
தெரிவித்தனர்.
“உங்கள் நடவடிக்கையால் நாம் மிகவும் வேதனையும் அதிர்ச்சியும் அடைந்துள்ளோம். இந்தச் செயல் நியூகாம் பிரதேசத்தில் வாழும் தமிழ் மக்களின் மனதைப் பாதிக்கும் என்பதை சிந்திக்காமல் மேற்கொள்ளப்பட்டது மிகுந்த வருத்தம் அளிக்கின்றது.
இனவெறி கொண்ட ஸ்ரீலங்கா அரசாங்கத்தால் நாங்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளோம் ஆதலால் தயவுசெய்து அந்த கொடியை அகற்றுங்கள்” என்பன போன்ற வாசகங்கள் அந்த மின்னஞ்சல்களில் அடங்கியுள்ளது.
இதேவேளை இளையோர் அமைப்பினர் சமூக வலைத்தளங்கள் மூலம் இது எங்களின் சுதந்திர நாள் அல்ல #notmyindependence என்றும் ஸ்ரீலங்கா ஒரு இன அழிப்பு செய்யும் நாடு #Srilankagenocide என்ற குறியீடுகள் பல்லாயிரக் கணக்காக பகிரப்பட்டது.
கீச்சுத்தளத்தில்(twiiter) மிக முக்கிய இடத்தை அந்நேரத்தில் எட்டியிருந்தமை இங்கே குறிப்பிடத்தக்கது.
தமிழ் மக்களின் மின்னஞ்சல்களுக்குப் பதிலளித்த நியூகாம் நகரசபை தலைவர் Rokhsana Fiaz இந்த விடயத்திற்கு முன்னுரிமை கொடுத்து ” இச்செயல் நடந்ததை எண்ணி நான் வேதனையும் வருத்தமும் அடைகின்றேன். இது தொடர்பாக தலைமை நிர்வாகியிடம் விசாரணை செய்யும்படி பணித்துள்ளேன். ” என தெரிவித்துள்ளார்.
அதே போல் தலைமை நிர்வாக அதிகாரியும் பதிலளித்திருந்தார். அதில் “ இந்த கொடி ஏற்றப்பட்டதால் நீங்கள் அடைந்த வருத்தத்திற்கும் துன்பத்திற்கும் என்னுடைய மன்னிப்பைத் தெரிவித்துக்கொள்கின்றேன். நீங்கள் அனுப்பிய மின்னஞ்சல்கள் உங்களுடைய நிலைமையை தெளிவாக விளக்கியது. எங்களுடைய பிழையை நாம் புரிந்துகொண்டோம். அடுத்த வருடம் இந்த தவறை செய்யமாட்டோம்” என குறிப்பிட்டுள்ளார்.