அதிமுக பொதுச் செயலாளர் இல்லாமல் கூடிய பொதுக் குழுக் கூட்டம் செல்லாது என அறிவிக்கக் கோரிய வழக்கை மீண்டும் விசாரணைக்கு எடுக்கும் நடவடிக்கையில் சசிகலா இறங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதால், அதிமுக-வினர் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து வருகின்றனர்.
அதிமுகாவின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறந்த பிறகு அதிமுக பொதுக் குழு கூட்டம் கூடி சசிகலாவை அதிமுக பொதுச் செயலாளராக தெரிவு செய்தது.
அதற்கான கோப்புகளும், சசிகலாவிடம் ஒப்படைக்கப்பட்டது. இது போன்ற நிலையில் தான் சசிகலா சொத்து குவிப்பு வழக்கில் சிக்க, பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டார்.
இதைத் தொடர்ந்து, கடந்த 2017-ஆம் ஆண்டு அதிமுக பெயரில் பொதுக் குழுக் கூட்டம் நடைபெற்றது. இதில் பொதுச் செயலாளர், துணை பொதுச் செயலாளர் ஆகிய பதவிகளை நீக்கிய அதிமுக நிர்வாகிகள், புதிதாக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகிய பதவிகளை உருவாக்கினர்.
இந்த கூட்டம் செல்லாது என அறிவிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில், சசிகலாவும் டிடிவி தினகரனும் வழக்கு தொடர்ந்தனர்.
அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா உள்ள நிலையில் கட்சி விரோதமான செயல்பாடுகளை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வமும் அவருடன் இருந்த அமைச்சர்களும் நிர்வாகிகள் மேற்கொண்டதாக சசிகலாவும், டிடிவி தினகரனும் குற்றம்சாட்டியிருந்தார்கள்.
அவைத் தலைவராக மதுசூதனன், பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் நியமிக்கப்பட்டது செல்லாது என அறிவிக்கக் கோரியும் வாதிட்டனர். அது போல் பொதுக் குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 12 தீர்மானங்கள் செல்லாது என அறிவிக்க வேண்டும்.
கட்சியின் பொதுச் செயலாளர், துணை பொதுச் செயலாளர் ஆகிய பதவிகளிலிருந்து தங்களை நீக்கியது செல்லாது என அறிவிக்கக் கோரினர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, கட்சி தொடர்பான அனைத்து ஆவணங்களையும் அதிமுக தலைமைக் கழகம் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டார்.
இந்த வழக்கில் தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. சுமார் 3 ஆண்டுகளுக்கு மேலாக இந்த வழக்கு நிலுவையில் இருந்து வருகிறது.
தற்போது சிறையிலிருந்து விடுதலையாகியுள்ள சசிகலா,நாளை மறுநாள் சென்னை வருகிறார். அவர் அதிமுக பொதுச் செயலாளர் என்ற உரிமையுடன் விக்டோரியா மருத்துவமனையிலிருந்து பண்ணை வீட்டிற்கு சென்ற போது காரில் அதிமுக கொடியை பயன்படுத்தியிருந்தார்.
தற்போது நாளை மறுநாள் தமிழகத்திற்கு வருகை தரும் சசிகலா தனது காரில் நிச்சயம் அதிமுக கொடியுடனே வருவார் என்று கூறப்படுவதால், இந்த வழக்கை மீண்டும் தூசி தட்டி விசாரிக்க சசிகலாவும் தினகரனும் யோசித்து வருவதாக கூறப்படுகிறது.
இன்னும் சில மாதங்களில் தேர்தல் வரும் நிலையில் இந்த வழக்கால் அதிமுகவுக்கு நெருக்கடி ஏற்படலாம் என்று நம்பப்படுகிறது.