சிங்கள மக்களோடு இணைந்து வாழவே இன்னும் விரும்புகிறோம். அஹிம்சைவழி நியாயமான நீதியான போராட்டம் தொடரும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் கல்முனை மாநகரசபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜன் தெரிவித்தார்.
அம்பாறை மாவட்டம் கல்முனை ஊடக மையத்தில் நேற்று (12) மாலை நடாத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு மேற்கண்டவாறு கூறினார். மேலும் தனது கருத்தில்-
பொத்துவில் – பொலிகண்டி பேரணியில் முழுமையாக பங்கேற்மை மகிழ்ச்சியாகவுள்ளது. இது நாம் பிறந்த நாடு. எமக்கும் இந்தநாடு சொந்தம். எமது பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் வந்திறங்கியதும் இப்போராட்டத்திற்கு நாம் அனைவரும் வாகனத்தை விட்டு கீழே இறங்கி போராட்டத்திற்கு பிள்ளையார்கழி போட்டோம்.
பின்பு பொலிசார் படையினர் தடை என்று பல வந்தன. அத்தனையையும் சுமந்திரன் சாணக்கியன் தலைமையில் எதிர்கொண்டு முன்னேறினோம். அதுவே எமக்கு உற்சாகத்தையும் அளித்தது. நாம் நகரநகர மக்களின் உணர்வு ரீதியான பங்களிப்பு கூடுதலாகவிருந்தது. சர்வமத்தலைவர்கள் வழி தடாத்தினர். பொலிகண்டி வரை சென்று திரும்பினோம். இது முடிவல்ல ஆரம்பம். தொடர்ச் சியாக எமது உரிமைகளில் கைவைத்தால் அஹிம்சைவழி நியாயமான நீதியான போராட்டம் தொடரும். இதில் மாற்றுக்கருத்திற்கிடமில்லை. தொகை அளவில் சிறிதளவே தவிர சிறுபான்மை அல்ல.
ஏனையவர்களைப் போல சமஉரிமை எமக்குமுண்டு. அதில் இடர்பாடு வந்தபோது ஏலவே பலகோணங்களில் போராட்டங்கள் இடம் பெற்றன. இன்னமும் வருகின்ற போது எமது போராட்டம் தொடகும். எமது பேரணியின் கோரிக்கைகளில் இரண்டுக்கு அரசாங்கம் செவிசாய்த்துள்ளது. தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் ஜனாசா அடக்கம் இவையிரண்டுக்கும் வெற்றி கிடைத்துள்ளன. எமது பேரணி வெற்றிபெற உவிய இறைவனுக்கு நன்றிகள்.
பங்கேற்றவர்கள் எமதருமை மக்கள் ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றிகள். தமிழ் பேசும் மக்களுக்கான நீதியை வேண்டி அரசாங்கத்திற்கு எதிராகவே எமது பேரணி இடம்பெற்றது. தவிர அது சிங்களமக்களுக்கெதிரானதல்ல நாம் இன்னமும் சிங்களமக்களோடு இணைந்து வாழவே விரும்புகிறோம் என கூறினார்.



















