சுகாதார வழிமுறைகளை விடுத்து தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி செயற்பட்ட 1400 நிறுவனங்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக கால்துறையினர் தெரிவிக்கின்றனர்.
கொவிட்-19 பரவல் காரணமாக சுகாதார தரப்பினர், அரச மற்றும் தனியார் நிறுவனங்களில் முன்னெடுக்க வேண்டிய முறைமை தொடர்பான வழிகாட்டல்களை அறிவித்துள்ளனர்.
இதற்கமைய சுகாதார வழிமுறைகள் பின்பற்றப்படுகின்றதா? இல்லையா? என்பது தொடர்பில் காவல்துறையினர் மற்றும் சுகாதார தரப்பினரால் பரிசோதனைகள் முன்னெடுக்கப்படுவதாக காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
இதுவரையில் சுமார் 12,000 நிறுவனங்களில் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அவற்றில் 1400 நிறுவனங்கள் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி செயற்பட்டுள்ளமை தெரிய வந்துள்ளது.
எனவே, அந்த நிறுவனங்களின் முகாமைத்துவம் மற்றும் தலைவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இதேவேளை, இன்று காலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் முகக்கவசம் அணியாமை மற்றும் சமூக இடைவெளியை பேணாத 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கமைய இதுவரையில் முகக்கவசம் அணியாமை மற்றும் சமூக இடைவெளியை பேணாத 3107 கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவ்வாறு தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறி செயற்படுபவர்களை கைது செய்வதற்கான சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாகவும் காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.


















