தமிழர்கள் தமது கௌரவம், சமத்துவம் மற்றும் நீதியைப் பாதுகாத்துக்கொள்வதற்கு ஆட்சியதிகாரம் அவர்களின் கைகளில் இருக்கவேண்டும் என தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள உத்தேச புதிய அரசியலமைப்பு உருவாக்கக்குழுவிடம் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள், தமது யோசனைகளைக் கையளித்தனர்.
அதனைத் தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே இரா.சம்பந்தன், இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் கூறியுள்ளதாவது, “எமது உள்ளக சுயநிர்ணய உரிமை மதிக்கப்பட வேண்டும். தமிழ் மக்கள் தமது கௌரவத்தையும் சமத்துவத்தையும் நீதியையும் பாதுகாத்துக்கொள்வதற்கு ஆட்சியதிகாரம் அவர்களின் கைகளில் இருக்கவேண்டும். இதனை புதிய அரசியலமைப்பு உருவாக்கக்குழுவிடம் மிகவும் உறுதியாக வலியுறுத்தியிருக்கின்றோம்.
குறித்த பிரச்சினை பல வருடகாலமாகத் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது. அரசியலமைப்பின் 13ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்டதன் பின்னர், இப்பிரச்சினைக்குத் தீர்வினை வழங்குவதற்குப் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
மேலும், தமிழ்மக்களுக்கு நியாயமானதும் அர்த்தமுள்ளதுமான அதிகாரப் பரவலாக்கமொன்று வழங்கப்பட வேண்டியதன் அவசியம் குறித்து அரசியலமைப்பு உருவாக்கக்குழுவிடம் எடுத்துரைத்தோம்.
அத்துடன் புதிய அரசியலமைப்பு உருவாக்க நடவடிக்கைகளுக்குத் தொடர்ந்தும் ஒத்துழைப்பை வழங்குவதற்குத் தயாராக இருக்கின்றோம்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.