உலகப் பொருளாதாரத்தில் எமது வர்த்தக பங்கை அதிகரிக்க உதவும் வகையில் ஒவ்வொரு துறையிலும் புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்த அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.
சுபீட்சத்தின் நோக்கு´ கொள்கைத் திட்டத்தில் வாக்குறுதியளித்ததைப் போலவே, இந்த நோக்கத்துடன் ஒரு தனி தொழில்நுட்ப அமைச்சை அரசாங்கம் நிறுவியுள்ளது என்றும் ஜனாதிபதி கூறினார்.
விஞ்ஞான, தொழில்நுட்பத்திற்கான அணிசேரா நாடுகள் மற்றும் அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளுகளின் 15 வது ஆளுநர் சபை கூட்டம் நேற்று முன்தினம் (24) முற்பகல் நடைபெற்றது. இதில் Zoom தொழிநுட்பத்தின் ஊடாக உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.
தொழில்நுட்ப அமைச்சின் வழிகாட்டுதலின் கீழ் தேசிய விஞ்ஞான மற்றும் ஆராய்ச்சி ஆணைக்குழு ஏற்பாடு செய்த இந்த மாநாடு கொழும்பு மிலோதா நிதி கற்கைகள் நிறுவனத்தில் இடம்பெற்றது.
Zoom தொழில்நுட்பம் மூலம் 22 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்ட இவ்வருட மாநாட்டிற்கு இலங்கை தலைமை மற்றும் உபசரிப்பு பொறுப்பை வகிக்கின்றது.
தொழில்நுட்ப அடிப்படையிலான பொருளாதாரம் கொண்ட நாடாக மாற, சுதேச தொழில்நுட்பம் நவீன தொழில்நுட்பத்துடன் ஒருங்கிணைக்கப்பட வேண்டும் என்று ஜனாதிபதி வலியுறுத்தினார்.
சூழல் நட்புடைய சுதேச மற்றும் பாரம்பரிய தொழில்நுட்பத்தின் பெருமைமிக்க வரலாறு எங்களிடம் உள்ளது. கோவிட் தொற்றுநோய் நிலைமைகள் விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பத்திற்கும், ஆராய்ச்சியாளர்கள், விஞ்ஞானிகள் மற்றும் புதிய கண்டுபிடிப்பாளர்களுக்கும் சுகாதாரத் துறையில் உடனடி தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான திறனை நிரூபிக்க ஒரு வாய்ப்பை வழங்கியுள்ளது என்று ஜனாதிபதி கூறினார்.
இந்த மாநாட்டில் மூன்று தசாப்தங்களின் எதிர்காலத் திட்டங்களைப் பற்றி விரிவாக ஆராயப்பட்டதுடன், உறுப்பு நாடுகளுக்கு இடையில் விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அறிவைப் பரிமாறிக்கொள்ளவும், அடுத்த பணியகக் கூட்டத்தை 2021 செப்டம்பரில் மொரீஷியஸில் நடத்தவும் இணக்கம் தெரிவிக்கப்பட்டது. உறுப்பு நாடுகளுக்கு இடையே பரிமாறிக்கொள்ளப்பட்ட அறிவின் அடிப்படையில் எழுதப்பட்ட ஐந்து புத்தகங்களும் வெளியிட்டு வைக்கப்பட்டன.
வெளிநாட்டு தூதுவர்கள், விஞ்ஞான மற்றும் தொழில்நுட்பத் துறையுடன் சம்பந்தப்பட்ட நாட்டின் அரச நிறுவனங்களின் தலைவர்களும் இந்த மாநாட்டில் கலந்து கொண்டனர்.