காஷ்மீரில் எல்.ஓ.சி. என்னும் எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் இரு தரப்பும் தாக்குதல் நடத்தக்கூடாது என இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே சண்டை நிறுத்த ஒப்பந்தங்கள் ஏற்பட்டுள்ளன.
ஆனாலும் அந்த ஒப்பந்தங்களை பின்பற்றாமல்தான் பாகிஸ்தான், எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் தொடர்ந்து அத்துமீறி தாக்குதல்களை நடத்தி வந்தது. இந்தியாவும் பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்து வந்தது. இதனால் இரு தரப்பும் எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் மோதிக்கொள்வது தொடர்கதையாக நீடித்து வந்தது.
இதையொட்டி நாடாளுமன்றத்தில் இந்த மாத தொடக்கத்தில் கேள்வி எழுப்பப்பட்டது. அந்த கேள்விக்கு உள்துறை ராஜாங்க மந்திரி ஜி.கிஷான் ரெட்டி பதில் அளித்தபோது, பாகிஸ்தானுடனான இந்திய எல்லையில், கடந்த 3 ஆண்டுகளாக 10 ஆயிரத்து 752 சண்டை நிறுத்த ஒப்பந்த மீறல்கள் நடந்துள்ளன, அவற்றில் பாதுகாப்பு படை வீரர்கள் 72 பேரும், அப்பாவி மக்கள் 70 பேரும் கொல்லப்பட்டுள்ளனர் என தெரிவித்தார்.
அதுமட்டுமின்றி, 2018, 2019 மற்றும் 2020 ஆண்டுகளில் காஷ்மீரில் எல்லை கட்டுப்பாட்டு கோடு மற்றும் சர்வதேச எல்லையில் பாகிஸ்தான் எல்லை தாண்டி நடத்திய துப்பாக்கிச்சூடுகளில் 364 படைவீரர்களும், 341 அப்பாவி மக்களும் காயம் அடைந்துள்ளனர் எனவும் தெரிவித்தார்.
இந்த நிலையில், இந்திய, பாகிஸ்தான் தரப்பு ராணுவ நடவடிக்கை தலைமை இயக்குனர்கள் (டி.ஜி.எம்.ஓ.), ஹாட்லைன் தொலைபேசி வழியாக தொடர்பு கொண்டு பேசினார்கள். அந்த பேச்சுவார்த்தையில், எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் அனைத்து சண்டை நிறுத்த ஒப்பந்தங்களையும் கண்டிப்பாக கடைப்பிடிப்பது என இரு தரப்பிலும் ஒப்புக்கொள்ளப்பட்டு உள்ளது. இது நேற்றுமுன்தினம் நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வந்து விட்டது.
இது தொடர்பாக இரு தரப்பிலும் ஒரு கூட்டறிக்கையும் வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறி இருக்கும் முக்கிய அம்சங்கள் வருமாறு:
* எல்லை கட்டுப்பாட்டு கோடு மற்றும் பிற பகுதிகயில் உள்ள நிலவரம் குறித்து சுதந்திரமாகவும், வெளிப்படையாகவும், நல்ல சூழ்நிலையில் விவாதிக்கப்பட்டது.
* எல்லைகளில் பரஸ்பர நன்மை பயக்கும் மற்றும் நிலையான அமைதியை அடைவதற்கான ஆர்வத்தில் இரு தரப்பு ராணுவ நடவடிக்கை தலைமை இயக்குனர்கள், ஒருவருக்கொருவர் அமைதியை குலைத்து வன்முறைக்கு வழிவகுக்கும் முக்கிய பிரச்சினைகள் மற்றும் கவலைகளைத் தீர்ப்பதற்கு ஒப்புக்கொண்டுள்ளனர்.
* பிப்ரவரி மாதம் 24-ந்தேதி (நேற்று முன்தினம்) நள்ளிரவு முதல், நடைமுறைக்கு வரும் வகையில் அனைத்து ஒப்பந்தங்களையும், புரிந்துணர்வு ஒப்பந்தங்களையும், எல்லை கட்டுப்பாட்டு கோடு மற்றும் பிற பகுதிகளிலும் துப்பாக்கிச்சூடுகளை நிறுத்துவது என இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டனர்.
* எந்தவொரு எதிர்பாராத சூழ்நிலையையும் அல்லது தவறான புரிதலையும் தீர்ப்பதற்கு ஹாட்லைன் தொடர்பு மற்றும் எல்லை கொடி கூட்டங்களின் தற்போதைய வழிமுறைகளை பயன்படுத்துவது என மீண்டும் வலியுறுத்தப்பட்டது.
இவ்வாறு அந்த கூட்டறிக்கையில் கூறப்பட்டுள்ளது.