போலி ஜோதிடத்தால் பெற்ற மகனையே தந்தை ஒருவர் எரித்துகொன்ற் கொடூர சம்பவம் தமிழகத்தில் அரங்கேறியுள்ளது.
தமிழகத்தின் திருவாரூர் மாவட்டம் நன்னிலம் பெருமாள் கோயில் தெருவை சேர்ந்தவர் ராமையன். இவரது மகன் ராம்கி வயது 29. ராமையனுக்கு கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணமாகி உள்ள நிலையில் சாய்சரண் என்ற 5 வயது மகனும் சர்வேஷ் என்ற மூன்று மாத ஆண் குழந்தையும் உள்ளது.
ஆட்டோ மற்றும் வாடகை கார் ஓட்டுநரான ராம்கி ஜோதிட விவகாரத்தில் அதிகம் நம்பிக்கை கொண்டவர். பல்வேறு ஜோதிடர்களை அவர் சந்தித்து தனது வாழ்வில் முன்னேற்றம் ஏற்பட என்ன செய்ய வேண்டும் என கேட்டுள்ளார். அதற்கு ஒரு ஜோதிடர் ராம்கியின் மூத்த மகன் சாய்சரண் இருக்கும் வரை அவருக்கு வாழ்வில் முன்னேற்றம் இருக்காது என தெரிவித்ததனால் மூத்த மகனை 15 ஆண்டுகள் ஹாஸ்டலில் தங்க வைக்கப் போவதாக மனைவியான காயத்ரியிடம் தெரிவித்துள்ளார்.
இதனால் ராம்கி காயத்ரி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று மது போதையில் வீட்டுக்கு வந்த ராம்கி மூத்த மகனான 5 வயது சிறுவன் சாய்சரணை உடனடியாக வீட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என மனைவியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
அத்துடன் அருகில் இருந்த மண்ணெண்ணெய் கேனை எடுத்து சாய்சரண் மீது ஊற்றி பற்ற வைத்துள்ளார். இந்நிலையில் தாயின் அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து சாய்சரணை மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
எனினும் 90 சதவீத காயங்களுடன் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட சாய்சரண் மேலதிக சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி சிறுவன் உயிரிழந்துள்ளான்.
இதனையடுத்து சிறுவனின் தந்தை ராம்கியை கைது செய்த பிலிஸார் தொடர் விசாரணை மேற்கொண்டனர். அப்போது ராம்கி அளித்த வாக்குமூலத்தின்படி, தான் ஜோதிடத்தின் மீது நம்பிக்கை கொண்டு தனது மகனை மண்ணெண்ணெய் ஊற்றி எரித்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார்.
மேலும் ராம்கியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். ஜோதிடத்தால் பெற்ற மகனையே மண்ணெண்ணெய் ஊற்றி எரித்த சம்பவம் அப் பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.