உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு, பொதுபல சேனா அமைப்பை தடை செய்வதற்கு பரிந்துரைத்த போதிலும் அதனை நிராகரிப்பதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் இதனைத் தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
“உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையில் உள்ள சில பரிந்துரைகளை அமுல்படுத்துவது சிரமமாகும். விசேடமாக பொதுபல சேனா அமைப்பு குறித்த பரிந்துரையை அமுல்படுத்துவதானது கடினமாகும்.
அரசாங்கத்தின் விருப்பமும் அது இல்லை. அந்த அமைப்பை தடை செய்வதால் நன்மை ஏற்படும் என்றல்ல. ஆகவே அரசாங்கம் அவ்வமைப்பை தடை செய்யாது. ஆனால் கல்வி குறித்த பரிந்துரைகளை அமுல்படுத்த முடியும்.
இனவாத சிந்தனைகள் பாட விதானங்களில் சேர்க்கப்பட்டுள்ள நிலையில் அவற்றை நீக்க வேண்டும். மத்ரஸா நிலையங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட வேண்டும் உள்ளிட்ட பரிந்துரைகளை கல்வி அமைச்சு அனுமதிக்கின்றது“ என்றார்.