மக்களின் பிரச்சினைகளைக் கேட்டறிய வேண்டிய ஜனாதிபதி ஒவ்வொரு கிராமங்களுக்கும் சென்று, தனது பிரச்சினைகளை மக்களிடம் கூறுகின்றார் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தி உருவாக்கப்பட்டு ஒருவருடம் பூர்த்தியடைந்துள்ளமையை முன்னிட்டு நேற்று திங்கட்கிழமை கொழும்பு ஹைட்பார்க்கில் மக்கள் கூட்டமொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்வின் போது உரையாற்றிய ஹரின்,
நாட்டை பாதுகாப்பதாகக் கூறி ஆட்சியதிகாரத்தை கைப்பற்றிய ஜனாதிபதியிடமிருந்து தற்போது நாட்டைப் பாதுகாக்க வேண்டிய நிலையேற்பட்டுள்ளது. அதுமாத்திரமன்றி மக்களின் பிரச்சினைகளைக் கேட்டறிய வேண்டிய ஜனாதிபதி ஒவ்வொரு கிராமங்களுக்கும் சென்று, தனது பிரச்சினைகளை மக்களிடம் கூறுகின்றார்.
இவை ஜனாதிபதியின் செயற்பாடுகளும் கொள்கைகளும் தோல்வியடைந்திருப்பதையே பிரதிபலிக்கின்றன. ஐக்கிய தேசியக்கட்சி அதன் கொள்கைகளுக்கு முரணாக செயற்பட்டமையினால் நாட்டுமக்கள் அதனைப் புறக்கணித்தார்கள். அதன் விளைவாகவே நாங்கள் ஒன்றிணைந்து ஐக்கிய மக்கள் சக்தியை ஸ்தாபித்தோம்.
எதிர்வரும் காலங்களில் இடம்பெறக்கூடிய தேசிய ரீதியான தேர்தல்களில் ஐக்கிய மக்கள் சக்தியே ஆட்சியமைக்கும்.
ஆட்சி மாறினாலும் காட்சி மாறாது என்பார்கள். தற்போதைய அரசாங்கத்தின் தன்மையும் இவ்வாறானதாக காணப்படுகிறது. செல்வந்தர்களுக்கு சார்பாகவே அரசாங்கம் செயற்படுகிறது. நடுத்தர மக்கள் குறித்து அக்கறை காண்பிப்பதாகத் தெரியவில்லை.
நாட்டை பாதுகாப்பதாக குறிப்பிட்டுக் கொண்டு ஆட்சிக்கு வந்த அரசாங்கத்திடமிருந்து இன்று நாட்டைப் பாதுகாக்க வேண்டியுள்ளது. பொருளாதாரத்தின் பல்வேறு துறைகளும் பாரிய சவால்களுக்கு முகங்கொடுத்துள்ளன.
இந்நிலையிலிருந்து நாட்டை மீட்டெடுப்பதற்கு அனைத்துத் தரப்பினரையும் ஒன்றிணைத்துக்கொண்டு செயற்படுவதற்கு நாம் தயாராக இருக்கின்றோம் என்று குறிப்பிட்டார்.