திருவொற்றியூர் தொகுதி வேட்பு மனு தாக்கலின்போது சீமான் தனது சொத்து மதிப்பு விவரங்களை வெளியிட்டதோடு மனைவியின் வருமானம் குறித்த தகவலையும் வெளியிட்டுள்ளார்.
திருவொற்றியூர் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடுகிறார். அவர் நேற்று வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
வேட்பு மனுவுடன் சேர்த்து, தனது சொத்து விபரங்களையும் தாக்கல் செய்தார். அதில், 2015-2016ம் ஆண்டு வருமான வரி கணக்கில் 29,439 ரூபாய் வருமானம் என்று காட்டியுள்ளார். ஆனால் 2019-2020ம் ஆண்டு வருமான வரி கணக்கில் ஆயிரம் ரூபாய்தான் என்று காட்டியுள்ளார்.
இதன் மூலம் அவரது வருமானம் குறைந்ததாக காட்டியுள்ளார். ஆனால் அவரது மனைவி கயல்விழிக்கு வருமானமாக 2015-2016ல் 12,939 காட்டியுள்ளார். ஆனால் 2019-20ம் ஆண்டு 72,820 என காட்டியுள்ளார்.
அதேநேரத்தில் வதந்திகளை பரப்புதல், மத உணர்வுகளை தூண்டுதல், சட்டவிரோதமாக கூடுதல் என்று சீமான் மீது 17 வழக்குகள் நிலுவையில் இருப்பதாக காட்டியுள்ளார்.
சீமான் கையில் 40 ஆயிரம், மனைவியிடம் ரூ.35 ஆயிரம் உள்ளது. வங்கியில் ஒரு லட்சத்து ஆயிரத்து 500 இருப்பதாகவும், மனைவியின் வங்கி கணக்கில் 55,031 இருக்கிறது.
மனைவியின் முதலீடுகள் ரூ.1.75லட்சம். 26 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் இஸூசூ கார், மனைவியின் பெயரில் 11 லட்சம் மதிப்புள்ள கார், சீமானிடம் தங்கம் 150 கிராம், மனைவிக்கு 1600 கிராம் தங்கம் உள்ளது.
சீமான் மற்றும் அவரது மனைவி பெயரில் விவசாய நிலம் இல்லை என்று கூறியுள்ளார். அதேநேரத்தில், மதுரை, திண்டுக்கல்லில் 2 இடங்கள் உள்ளதாக கூறியுள்ளார். இதன் மதிப்பு 31 லட்சம் ரூபாய். மனைவி கயல்விழிக்கு வங்கியில் ரூ.6 லட்சத்து 9 ஆயிரம் கடன் இருப்பதாக கூறியுள்ளார்.