மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தனக்கு ரூ.176.93 கோடி மதிப்பில் சொத்துகள் உள்ளதாக, தனது வேட்புமனுவில் தெரிவித்துள்ளார்.
மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன், கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடுகிறார். இவர், கோவை தெற்கு தொகுதிக்குட்பட்ட மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில், தனது வேட்புமனுவை நேற்று தாக்கல் செய்தார். வேட்பு மனு படிவத்துடன் தனது சொத்து விவரம் குறித்த அறிக்கையும் கமல்ஹாசன் வழங்கியுள்ளார்.
அதன்படி, கமல்ஹாசனுக்கு அசையா சொத்துகள் ரூ.131 கோடியே 84 லட்சத்து 45 ஆயிரம் எனவும், அசையும் சொத்துகள் ரூ.45 கோடியே 9 லட்சத்து 1,476 என மொத்தம் ரூ.176 கோடியே 93 லட்சத்து 46 ஆயிரத்து 476 மதிப்பில் சொத்துகள் இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும், தனக்கு ரூ.49 கோடியே 50 லட்சத்து 11 ஆயிரத்து 10 கடன் உள்ளதாகவும் , கடந்தாண்டு ரூ.22 கோடி வருவாய் கிடைத்ததாகவும் அதில் குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி, அவர் தாக்கல் செய்த சொத்து விவரம் குறித்த அறிக்கையில் கூறியிருப்பதாவது, “சென்னை ஆழ்வார்பேட்டையில் வசித்து வருகிறேன். எனக்கு 66 வயது ஆகியுள்ளது. மயிலாப்பூர் தொகுதியில் எனக்கு ஓட்டு உள்ளது. எட்டாம் வகுப்பு வரை படித்துள்ள என் மீது 3 வழக்குகள் நிலுவையில் உள்ளன.
என்னிடம் கையிருப்பு ரொக்கம் ரூ.1 லட்சத்து 51 ஆயிரத்து 712 உள்ளது. தவிர, கனரா வங்கியில் 22 லட்சத்து 57 ஆயிரத்து 825 ரூபாயும், மற்றொரு கனரா வங்கி கிளையில் 18 லட்சத்து 31 ஆயிரத்து 740, மற்றொரு கனரா வங்கி கிளையில் 1 கோடியே 93 லட்சத்து 30 ஆயிரத்து 477 ரூபாயும் மற்ற வங்கிகளில் 4 லட்சத்து 76 ஆயிரத்து 159 ரூபாய் பணமும் சேமிப்பில் உள்ளது. இவை தவிர, வைப்புத் தொகை வகையில், ஒட்டுமொத்தமாக ரூ.2 கோடியே 43 லட்சத்து 84 ஆயிரத்து 563 தொகை உள்ளது.
பங்குகள் மற்றும் முதலீட்டுப் பத்திரங்களாக, 26 லட்சத்து 11 ஆயிரத்து 215 ரூபாயும், தபால் சேமிப்பு, இன்சூரன்ஸ் பாலிசி வகைகளில் 2 கோடியே 39 லட்சத்து 97 ஆயிரத்து 783 ரூபாயும், தனிநபர் கடன், முன்பணம், அறக்கட்டளை வகைகளில் 36 கோடியே 24 லட்சத்து 62 ஆயிரத்து 90 ரூபாயும் தொகை இருப்பு உள்ளது.
எனக்கு சொந்தமாக 98 லட்சத்து 73 ஆயிரத்து 444 ரூபாய் மதிப்புள்ள பி.எம்.டபிள்யூ கார், 2 கோடியே 70 லட்சத்து 66 ஆயிரத்து 198 ரூபாய் மதிப்புள்ள லான்சர் கார் உள்ளது. சொத்து மூலமாக கிடைத்த வட்டித் தொகை 3 லட்சத்து 54 ஆயிரத்து 1 ரூபாய் உள்ளது.
கொடைக்கானலில் உள்ள விளாப்பட்டி கிராமத்தில் 35.59 ஏக்கரில் விவசாய நிலம் உள்ளது. அதன் மதிப்பு ரூ.17.79 கோடி ஆகும். ஆழ்வார்பேட்டையில் ரூ.2.50 கோடி மதிப்பில் மூன்று பிளாட்கள், ரங்கநாதன் அவென்யூவில் ரூ.17 கோடி மதிப்பில் பிளாட் உள்ளது. லண்டனில் டவர் பிரிட்ஜ் சாலையில் ரூ.2.50 கோடி மதிப்பில் குடியிருப்பு உள்ளது.
மேலும் ஆழ்வார்பேட்டை எல்டாம்ஸ் சாலையில் 9,002 சதுரடியில் உள்ள கட்டிடத்தின் மதிப்பு ரூ.24.84 கோடி ஆகும். ஆழ்வார்பேட்டை டிடிகே சாலையில் உள்ள 23 ஆயிரம் சதுரடி பரப்பளவிலான கட்டிடத்தின் மதிப்பு ரூ.45.18 கோடி ஆகும். சென்னையின் உத்தண்டி கிராமம், சோளிங்கநல்லூர் ஆகிய இடங்களிலும் அசையா சொத்துகள் உள்ளதாக அவர் கூறியுள்ளார்.