பிரான்சில் AstraZeneca தடுப்பூசிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த ஊசி போட்டுக் கொண்டவர்களுக்கு ஆபத்தா என்பது குறித்து சுகாதார அமைச்சர் விளக்கமளித்துள்ளார்.
இங்கிலாந்து மற்றும் ஸ்வீடன் நாட்டின் மிக பெரிய மருந்து விற்பனை நிறுவனங்களில் ஒன்றான AstraZeneca கொரோனா தடுப்பூசிகளை உற்பத்தி செய்து வருகிறது.
இதற்காக ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பிரித்தானியா நாடுகளில் அந்நிறுவனம் 1.7 கோடி பேரிடம் பரிசோதனை மேற்கொண்டு பாதுகாப்பு தரவுகளை சேகரித்து வைத்துள்ளது.
இந்நிலையில், AstraZeneca தடுப்பூசியை போட்டு கொண்ட பின்னர் ஆஸ்திரியா நாட்டு பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். அவரது மரணம் அந்நாட்டில் அதிர்ச்சி ஏற்படுத்தியது.
அதுபற்றி அந்நாட்டு அரசு ஆய்வில் ஈடுபட்டது. இதனை தொடர்ந்து ஆஸ்டிரா ஜெனிகா தடுப்பூசி பயன்பாட்டுக்கு அந்நாடு தடை விதித்தது.
இதே போன்று ஐரோப்பிய நாடுகள் பல இந்த தடுப்பூசிக்கு தடை விதித்துள்ளன. கடுமையான பக்க விளைவுகள், அதாவது AstraZeneca தடுப்பூசி போட்டு கொண்ட முதியவர்கள் பலருக்கு ரத்த கட்டு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதையடுத்து இந்த தடுப்பூசிக்கு பிரான்ஸ் அரசு நேற்று தடை விதித்தது. அடுத்த 24 மணி நேரத்திற்கு இந்த தடுப்பூசி போட தடை என அறிவிக்கப்பட்டது.
பிரான்சில் மொத்தமாக 5 மில்லியன் பேருக்கு தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது. இதில், 1.3 மில்லியன் பேருக்கு AstraZeneca தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.
.
இதனால் தற்போது இந்த தடுப்பூசியின் பக்கவிளைவுகளை செய்தியில் அறிந்த பிரான்சில் இருக்கும் பலர், தாங்கள் அச்சத்தில் இருப்பதாக கூறி வருகின்றனர்.
இது குறித்து பிரான்ஸ் சுகாதார அமைச்சர், Olivier Véran, இந்த தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் ஆபத்தில் இல்லை. இந்த தடுப்பூசிகள் போட்டுக்கொண்டவர்கள் மேலதிகமாக எதையும் செய்யத்தேவையில்லை என அறிவுறுத்தியுள்ளார்.
மேலும், இந்த தடுப்பூசிகள் பிரான்சில் கொண்டுவரப்பட்டபோது முதன் முதலாக அதனை போட்டுக்கொண்டவர் சுகாதார அமைச்சர் Olivier Véran என்பது நினைவுகூரத்தக்கது.