மீன்பிடிக்க சென்ற மகன் குளத்தில் குளிக்கும் போது பரிதாபமாக மூழ்கி உயிரிழந்ததைக் கேள்விப்பட்ட தந்தை தானும் தற்கொலை செய்து கொண்டது சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம் சேந்தங்குடி சீர்காழி மெயின் ரோடு பகுதியில் வசித்து வருபவர் வினோத் குமார்(38). இவரது மனைவி சாரதா. இவர்களுக்கு 2 ஆண், 1 பெண் குழந்தைகள் உள்ள நிலையில் இளையமகன் சாம்சன் 5ம் வகுப்பு படித்து வந்துள்ளான்.
குறித்த சிறுவன் தனது நண்பர்களுடன் குளத்தில் மீன் பிடித்துவிட்டு, குளிக்க சென்றுள்ளான். அப்பொழுது சேற்றில் சிக்கி பரிதாபமாக நீரில் மூழ்கியுள்ளான். சிறுவனைக் காணாமல் தவித்த நண்பர்கள் சிறிது நேரம் தேடிபார்த்து விட்டு வீடுகளுக்குச் சென்றுள்ளனர்.
தவலறிந்த தாய் அலறியடித்து குளத்திற்கு வந்ததுடன் ஊர்மக்களும் வந்துள்ளனர். பின்பு தீயணைப்பு படையினருக்கு தகவல் அளிக்கப்பட்டு 2 மணிநேரம் தேடிய பின்பு சடலமாக மீட்கப்பட்டுள்ளான்.
சிறுவன் சேற்றில் சிக்கியதால் மூச்சுத் திணறி இறந்துள்ளது தெரியவந்துள்ளது. குறித்த தகவலை சிறுவனின் தந்தை வினோத் குமாருக்கு தெரிவிக்கப்பட்டதும், அதிர்ச்சியடைந்த அவர், வேதனையில் வீட்டிற்கு சென்று தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.
தந்தை மகன் இருவரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ள நிலையில் பொலிசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.