இலங்கையின் பன்மொழி, பல்லின, பன்மத, பன்மைத்தன்மையை புரிந்துக்கொண்டு இலங்கையை ஒரு பன்மைத்தன்மை கொண்ட நாடாக ஏற்காமல் நாட்டை ஒருபோதும் கட்டியெழுப்ப முடியாது என கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்தில் வாழும், கொழும்பு ஆனந்தா கல்லூரியின் பழைய மாணவர்களின், “ஜனநாயகத்துக்கான ஆனந்தியர்கள்” என்ற அமைப்பு நேற்றிரவு நடத்திய இணையரங்கத்தில் கலந்துக்கொண்டு உரை நிகழ்த்தியபோதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், சிங்களம் மட்டும், பெளத்தம் மட்டும் என்ற அடிப்படைகளில், தம்மை இரண்டாம், மூன்றாம் பிரஜைகளாக நிலை நிறுத்தும் நிலைமையை தமிழர்கள் ஒருபோதும் ஏற்க போவதில்லை.
ஆனந்தா கல்லூரி இலங்கையின் புகழ் பெற்ற சிங்கள பெளத்த கல்வி நிறுவனம். இலங்கையின் பிரபல சிங்கள அரசியல் நண்பர்களை உருவாக்கிய கல்லூரி இதுவாகும். ஆகவே இதன் பழைய மாணவர்களாகிய நீங்கள், “இலங்கை தேசத்தை கட்டியெழுப்புவோம்” என்ற நிகழ்வை நடத்துவது சாலப்பொருத்தமானது.
இலங்கையில் சிங்கள மொழி பேசுகின்றவர்கள், பெளத்த மதத்தை பேணுகின்றவர்கள் எண்ணிக்கையில் பெரும்பான்மை. அதில் எமக்கு பிரச்சினை இல்லை. அதுபற்றி உண்மையில் நான் மகிழ்கிறேன். ஆனால், இந்த சிங்கள, பெளத்தம் மட்டும் இலங்கை அல்ல.
ஆகவே இலங்கை நாட்டின் தேசியத்தை கட்டியெழுப்ப வேண்டுமானால், நம் நாட்டின் பன்மை தன்மையை முதலில் நீங்கள் ஏற்க வேண்டும். இதுதான் ஐக்கிய இலங்கைக்கான முதல் நிபந்தனை என்றார்.