2014ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி, தற்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷவின் அரசாங்கத்தை வீழ்த்த முன்னெடுக்கப்பட்ட சூழ்ச்சிகள் தற்போதும் தொடர்வதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற பொதுஜன பெரமுனவின் சட்டத்தரணிகள் சங்க மாநாட்டில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்.
அரசாங்கத்தை பலவீனப்படுத்த திட்டமிட்ட வகையில் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன. மக்கள் மத்தியில் உணர்வுபூர்வமாக பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் அக் குற்றச்சாட்டுக்கள் காணப்படுகின்றன.
கடந்த காலங்களில் சுற்று சூழல் அழிப்பு விவகாரம் பிரதான பேசுபொருளாக காணப்பட்டது. பிற நாடுகளில் இடம்பெற்ற காடழிப்பு படங்களை காண்பித்து அரசாங்கத்துக்கு எதிராக பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன.
சீனி வரிக்குறைப்பினால் ஏற்பட்ட நட்டத்தை மோசடி என குறிப்பிட்டு எதிர் தரப்பினர் போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார்கள். எதிர் தரப்பினரது இக்குற்றச்சாட்டுக்கு சாதகமாக ஆளும் தரப்பின் அமைச்சர்களும், இராஜாங்க அமைச்சர்களும் கருத்துரைத்தார்கள். அரசாங்கத்தை ஏதாவது ஒரு வழியில் பலவீனப்படுத்த வேண்டும் என்பது இவர்களின் நோக்கம் என்பதை வெளிப்படுத்தியுள்ளார்கள்.
தற்போது இறக்குமதி செய்யப்பட்ட தேங்காய் விவகாரம் அரசியல் களத்தில் சூடு பிடித்துள்ளது. இவ்விடயத்தில் அரசாங்கம் எதனையும் மறைக்கவில்லை. தேங்காய் எண்ணெயில் நச்சுப்பதாரத்தம் கலக்கப்பட்டுள்ளது என்பதை அரசாங்கமே வெளிப்படுத்தியது. இம்மோசடியுடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக சட்ட நடடிக்கை எடுக்கப்படும் என்பதை பகிரங்கமாக அறிவித்துள்ளோம் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.