நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்ட மூலத்தினால் இலங்கைக்கு எதிர்காலத்தில் ஏற்படும் விளைவுகள் மற்றும் அரசாங்கத்தின் முறையற்ற செயற்பாடுகள் ஆகியவற்றை நாட்டு மக்களுக்கு எதிர்வரும் வாரம் முதல் பகிரங்கப்படுத்துவோம் என தேசிய புத்திஜீவிகள் சங்கத்தின் தலைவர் நிஹால் நாணயக்கார தெரிவித்துள்ளார்.
நாட்டை பாதுகாக்க நாட்டு மக்கள் ஒன்றினைய வேண்டும் எனவும் மியன்மார் நாட்டு நிலைமையினை அரசாங்கம் தோற்றுவிக்க கூடாது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்ட மூலம் தொடர்பில் வினவிய போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில், கொழும்பு துறைமுக நகரத்தை சீனாவின் காலணித்துவ ஆட்சியின் கீழ் கொண்டு வருவதற்கு நாட்டு மக்கள் ஒருபோதும் இடமளிக்க கூடாது.
அரசியல்வாதிகள் தங்களுக்கு ஏதும் வரப்பிரசாதங்கள் கிடைத்தால் அமைதி காத்து அரசாங்கத்துக்கு சார்பாக செயற்படுவார்கள். அம்பாந்தோட்டை துறைமுகத்திலும் இவ்வாறான நிலைமையே ஏற்பட்டது. ஆட்சியிக்கு வரும் அனைத்து அரசாங்கங்களும் நாட்டின் தேசிய வளங்களை நேரடியாகவும், மறைமுகமாகவும் பிற நாட்டவர்களுக்கு தாரைவார்த்துள்ளார்கள்.
தற்போதைய அரசாங்கம் ஏனைய அரசாங்கங்களை காட்டிலும் எல்லையற்ற வகையில் செயற்பட்டுள்ளது. நாட்டுக்குள் பிறிதொரு நாட்டை உருவாக்கி அதற்கான உரிமையின சட்ட மூலத்தின் ஊடாக வழங்க இரகசியமான முறையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழுவினால் இலங்கைக்கு எதிர்காலத்தில் ஏற்படும் பேரழிவினை நாட்டு மக்களுக்கு அடுத்த வாரம் முதல் பகிரங்கப்படுத்துவோம்.
அரசாங்கத்தின் முறையற்ற செயற்பாடுகள் குறித்து நாட்டு மக்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும். மக்களின் போராட்டத்தை கொரோனாதாக்கத்தை காரணம் காட்டி அரசாங்கம் முடக்கும். மியன்மார் நாட்டு மக்கள் ஜனநாயகத்தை பாதுகாக்க இராணுவ ஆட்சிக்கு எதிராக போராடுகிறார்கள்.
இவ்வாறான நிலைக்கு நாட்டை கொண்டு செல்லாத அளவிற்கு அரசாங்கம் பொறுப்புடன் செயற்பட வேண்டும். மக்களின் எதிர்ப்புடன் அரசாங்கத்தை அடிபணிய வைக்க முடியும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.