பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் பெளத்த மத சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கான திட்டத்தினூடாக, இலங்கையைச் சேர்ந்த மூத்த பெளத்த பிக்குகள் அடங்கிய உயர்மட்டக்குழு 2021 ஏப்ரல் 19 முதல் 26 வரை பாகிஸ்தானுக்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளது.
பாகிஸ்தான் ஜனாதிபதி மற்றும் பிரதமரை சந்திப்பதோடு, இத்தூதுக்குழுவினர் டாக்ஸிலாவில் உள்ள காந்தாரா நாகரிகத்தின் புகழ்பெற்ற பாரம்பரிய இடங்களையும், மர்தானில் உள்ள ஸ்வாட் மற்றும் தக்த்-இ-பாஹியையும் பார்வையிடவுள்ளனர்.
மேலும் லாகூர் மற்றும் இஸ்லாமாபாத்தில் உள்ள பல்வேறு வரலாற்று மற்றும் தொல்பொருள் அற்புதங்களையும் பார்வையிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பாகிஸ்தான் பிரதமரின் அண்மைக்கால இலங்கை விஜயத்தைத் தொடர்ந்து, பாகிஸ்தானுக்கான மத சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கும், பாகிஸ்தான் மற்றும் இலங்கை மக்களிடையேயான தொடர்புகளை மேம்படுத்துவதற்கும் இலங்கையிலுள்ள பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயம் உயர்மட்ட பெளத்த பிக்குகளின் விஜயத்தை ஏற்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் (ஓய்வு பெற்ற) முஹம்மத் சாத் கட்டாக், 2021 ஏப்ரல் 19 கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தனிப்பட்ட முறையில் தூதுக்குழுவைச் சந்தித்ததோடு இந்த விஜயத்தை மேற்கொள்வதற்காக மூத்த பெளத்த பிக்குகள் காட்டிய ஆர்வத்தையும் பாராட்டினார்.



















