முன்னாள் அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவருமான ரிஷாத் பதியுதீன் அதிகாலையில் கைது செய்யப்பட்டமையானது மிகப் பெரும் கீழ்த்தரமான அரசியல் பழிவாங்கல் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் வவுனியா நகர சபை உறுப்பினர்களான ஏ.ஆர்.எம் லரீப் , எம்.எஸ். அப்துல் பாரீ தெரிவித்துள்ளார்.
புனித நோன்பு காலத்தில் மேற்கொள்ளப்பட்ட இந்தக் கைதானது மனிதாபிமானமுள்ள எவராலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று என்றும் அவர் விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார். அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
சிங்கள சமுகத்தின் மத்தியில் எழுந்துள்ள எதிர்ப்பலைகளையும் மறைத்து மக்களை திசை திருப்ப மேற்கொள்ளப்பட்ட நாடகங்களில் ஒன்றுதான் ரிஷாத் பதியுதீன் மற்றும் அவரது சகோதரரின் கைது. ஈஸ்டர் குண்டு தாக்குதலுக்கும் – ரிஷாத் பதியுதீனுக்கும் எந்தவொரு தொடர்பும் இல்லையென கடந்த அரசாங்கமும் இந்த அரசாங்கமும் விசாரித்து அறிக்கையும் வெளியாக்கியிருந்தது.
இப்போது திடீரென அந்த குண்டு வெடிப்பு சம்பவத்துக்கும் ரிஷாத்துக்கும் தொடர்பு என கூறுவது மிகக் கீழ்த்தரமான அரசியல் பழிவாங்கல் என்பது மட்டுமன்றி முஸ்லிம் சமுகத்தை வேரோடு இந்த நாட்டிலிருந்து துடைத்தெறியும் ஏற்பாடாகவே பார்க்க வேண்டியுள்ளது.
எனவே ரம்ழானுடைய நேரத்திலே அவர் சஹர் எனும் நோன்பை நோற்பதற்குக் கூட அனுமதிக்காமல் கைது செய்துள்ளனர். நிச்சயமாக இந்தச் செயல் இந்த நாட்டு முஸ்லிம் சமூகத்தின் ஒட்டுமொத்த பிரார்த்தனைகளாலும் அநியாயக்காரர்களின் அக்கிரமங்கள் விரைவில் முடிவுக்கு வர வழிவகுக்கும்.
சிறுபான்மை சமூகத்தின் உரிமைக்காக குரல் கொடுக்கின்ற சிறுபான்மை தலைமைகளின் குரல்களை நசுக்கி இன்னும் இச்சமூகத்தை அடியாமையாக்க நினைக்க பார்க்கிறார்களா என எண்ணத்தோன்றுகின்றது எனவும் அந்த அறிக்கயைில் தெரிவிக்கப்பட்டுள்ளது.