காய்ச்சல், மூச்சுத்திணறல் காரணமாக திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட வயோதிபர் இன்று அதிகாலை உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலையின் பேச்சாளரொருவர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் குறித்த நபருக்கு அன்டிஜன் பரிசோதனை செய்த பின்னர் அவருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சம்பவத்தில் திருகோணமலை – கந்தசாமி கோயில் வீதியைச் சேர்ந்த கே.மகேந்திரா (75 வயது) என்பவரே உயிரிழந்துள்ளதாக தெரியவருகிறது.
இதேவேளை தந்தை உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலையில் அழுது கொண்டிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவருக்கு பெறப்பட்ட அன்டிஜன் பரிசோதனையின் மூலம் மூவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
உயிரிழந்தவரின் மகன் திருகோணமலையில் உள்ள பிரபல சீமெந்து தொழிற்சாலையில் கடமையாற்றி வருகின்றவர் என ஆரம்பகட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
அந்த தொழிற்சாலையில் அதிகளவிலான கோவிட் தொற்றாளர்கள் இனங்காணபட்டிருந்த போதிலும் தொடர்ந்தும் பரிசோதனையின் போது அங்கு கடமையாற்றி வருபவர்களுக்கு தொற்று ஏற்படுவது கண்டறியப்பட்டுள்ளது.
ஆகவே சீமெந்து தொழிற்சாலையில் கடமையாற்றி வந்தவர்களுக்கு சிறந்த முறையில் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டதாக என்ற சந்தேகமும் பொதுமக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இது குறித்து சுகாதாரத் திணைக்களம் கூடிய கவனம் எடுக்க வேண்டும் எனவும், பாலையூற்று மற்றும் பூம்புகார் பகுதிகளில் சீமெந்து தொழிற்சாலையில் கடமையாற்றி வந்தவர்களுக்கே அதிகளவில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.