இறுதிக்கட்ட யுத்ததின் போது முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்களை நிறைவு கூருவதற்கு கோட்டாபய- மஹிந்த தலைமையிலான ஸ்ரீலங்கா அரசாங்கம் தடை விதிக்காது என கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
இறந்தவர்களுக்கான மதக் கடமைகளை நிறைவேற்றுவது அனைவரினதும் உரிமையெனவும் அவர் குறிப்பிட்டார். முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்களை நினைவு கூர ஸ்ரீலங்கா அரசாங்கம் தடை விதிக்குமா என்பது குறித்து முல்லைத்தீவிற்கு விஜயம் செய்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் ஊடகவியலாளர்கள் வினவிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அத்துடன் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் விவகாரம் மற்றும் அரசியல் கைதிகளின் விடுதலை குறித்தும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கருத்து வெளியிட்டார்.
கடந்த ஜனாதிபதி தேர்தலிலும், நாடாளுமன்ற தேர்தலிலும் எமது கையை பலப்படுத்தினால் அரசியல் கைதிகளின் விடுதலை உடனடியாக இடம்பெறும் என்றேன். அது விருப்பமில்லாமலே மக்கள் தனக்கு வாக்களிக்கவில்லை என மீன்பிடி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு மாவட்ட மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பில் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் மீன்பிடி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் காலை பதினொரு மணியளவில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. இந்த கலந்துரையாடலில் கலந்துகொண்ட மீன்பிடி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதன் போது அமைச்சரிடம் ஊடகவியலாளர் ஒருவர் அரசியல் கைதிகளின் விடுதலை தெடர்பில் பலர் உங்களிடம் நேரடியாகவே வருகைதந்து கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த விடயத்தில் அரசாங்கம் என்ன நிலைப்பாட்டில் உள்ளது என வினவினார். இதற்கு பதிலளித்த மீன்பிடி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,
அரசாங்கத்துக்கு மாத்திரமல்ல பலருக்கு பலவிதமான அபிப்பிராயங்கள் இருக்கிறன. நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலிலும், நாடாளுமன்ற தேர்தலிலும் நான் மக்களிடம் கேட்டிருந்தேன் அரசியல் கைதிகள் தொடர்பாக முடிவெடுப்பதற்கு எனக்கு கூடின வாக்குகளையும் கூடின ஆசனங்களையும் தருமாறு கேட்டிருந்தேன்.
அப்படி தந்திருந்தால் இந்த பிரச்சனையை உடனடியாக தீர்ப்பேன் என்றும் சொல்லியிருந்தேன். ஆனால் மக்கள் அந்த பிரச்சினையை தீர்க்க விரும்பவில்லையோ என்ற சந்தேகம் கூட எழுகின்றது எனவும் தெரிவித்துள்ளார்.