திருவனந்தபுரம் தேர்தல் வெற்றியைக் கொண்டாட இது நேரம் அல்ல என்றும் கோவிட் தொற்றுக்கு எதிரான போராட்டங்கள் தொடரும் என்றும் வெற்றிக்குப் பின் கேரள முதல்வர் பினராயி விஜயன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
தமிழகத்தைப் போலவே கேரளாவிலும் கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி ஒரே கட்டமாகச் சட்டசபை தேர்தல் நடைபெற்றது. இன்று காலை முதல் கேரளாவில் வாக்கு எண்ணும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் தமிழகத்தில் கேரளா, மேற்கு வங்கம், அசாம் ஆகிய மாநிலங்களில் ஆளும்கட்சியே ஆட்சியைத் தக்க வைத்துள்ளது. தமிழகம் மற்றும் புதுவையில் மட்டுமே ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது.
கேரளாவில் மீண்டும் இடதுசாரிகள்
குறிப்பாக, கேரளாவில் 40 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒரு கட்சி ஆட்சியை தக்க வைக்கிறது. கேரளாவில் மொத்தமுள்ள 140 தொகுதிகளில் இடதுசாரிகள் கூட்டணி 99 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. சிபிஎம் 62 தொகுதிகளிலும் சிபிஐ 17 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கிறது, கேரளாவில் மீண்டும் இடதுசாரிகள் ஆட்சி அமைவது உறுதியாகியுள்ள நிலையில், பினராயி விஜயனுக்குப் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
கொண்டாடும் நேரம் இல்லை
இந்நிலையில், தேர்தல் வெற்றி தொடர்பாக பினராயி விஜயன் கட்சி தொண்டர்களுக்கு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். தனது அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது,
சட்டசபை தேர்தலில் இடதுசாரிகள் பெற்றுள்ள மிகப் பெரிய வெற்றியைக் கொண்டாட அனைவருக்கும் விருப்பம் தான். இருந்தாலும், வெற்றி கொண்டாட்டங்களுக்கு இது சரியான நேரமில்லை. கோவிட் பரவலைக் கட்டுப்படுத்தும் நமது போராட்டம் தொடர்ந்து நடைபெறும் என்று தெரிவித்திருந்தார்.
சிறப்பாகக் கையாண்ட கேரளா
கோவிட் பரவலை மிகச் சிறப்பாகக் கையாண்ட மாநிலங்களில் ஒன்றாகக் கேரளா உள்ளது. கடந்த ஆண்டு முதலில் கேரளாவிலேயே கோவிட் உச்சமடைந்தது. அதைக் கேரள அரசு சிறப்பாகக் கையாண்டதாகப் பலரும் பாராட்டினர். அதேபோல கோவிட் 2ஆம் அலையில் ஆக்சிஜன் தேவை அதிகரிக்க வாய்ப்புள்ளதை உணர்ந்து, கடந்த ஆண்டே ஆக்சிஜன் சேமிப்பு மற்றும் உற்பத்தியையும் கேரள அரசு அதிகரித்தது. இதனால் கேரளாவில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்படவில்லை.
பாஜகவுக்கு இருந்த ஒற்றை சீட்டும் காலி
இடதுசாரி அரசின் மக்கள் சார்பு கொள்கை வாக்காளர்களைத் திருப்திப்படுத்தியுள்ளதையே இது காட்டுகிறது.இது மக்களின் வெற்றி. மோடி உள்ளிட்ட பல அமைச்சர்கள் கேரளாவில் தீவிர பிரசாரம் செய்தனர். இருப்பினும், அவர்கள் கைவசம் இருந்த ஒற்றை சீட்டையும் இழந்தனர். கேரள மக்கள் வகுப்புவாத சக்திகளைத் தோற்கடித்துள்ளனர் என்று சிபிஎம் கட்சியின் கோடியேரி பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.