சரியான மேக்கப் பொருட்களை தேர்ந்தெடுத்து வாங்கினால் மட்டும் போதாது. அவற்றை எந்த அளவில், எப்படி பயன்படுத்தவேண்டும் என்றும் தெரிந்திருக்கவேண்டும்.
இப்படி மேக்கப் போட்டால் நீங்கள் அழகு ராணியாக வலம் வரலாம்
பெண்கள் அழகை ஆராதிப்பவர்கள். அவசரமாக எங்கே கிளம்பிப்போனாலும், அதற்குள் ஒருமுறை கண்ணாடி முன்பு நின்று ‘முகத்தில் கிரீம் சரியாக பூசப்பட்டிருக்கிறதா? துல்லியமாக கண்மை இட்டு, பொட்டு பொருத்தமாக அமைந்திருக்கிறதா?’ என்றெல்லாம் ஒரு பார்வை பார்த்துவிட்டுத்தான், வெளியே கிளம்புகிறார்கள். எல்லாம் சரியாக இருந்தால்தான் முகத்தில் தன்னம்பிக்கையும், மகிழ்ச்சியும் தவழும்.
அழகில் அதிக அக்கறை எடுத்துக்கொண்டு அதைத் தேடி செல்லும்போது சில நேரங்களில் அபத்தங்களும் ஏற்படத்தான் செய்கின்றன. சில பெண்கள் முகத்திற்கான கிரீமை அடிக்கடி மாற்றிக்கொண்டே இருப்பார்கள். எது நன்றாக அமையுமோ அதை தேர்ந்தெடுத்துவிடலாமே என்று நினைப்பார்கள். ஆனால் எதுவும் சரியாக அமையாமல், இருக்கிற அழகையும் கெடுத்துக்கொள்வதுண்டு. சரியான மேக்கப் பொருட்களை தேர்ந்தெடுத்து வாங்கினால் மட்டும் போதாது. அவற்றை எந்த அளவில், எப்படி பயன்படுத்தவேண்டும் என்றும் தெரிந்திருக்கவேண்டும். இளம் பெண்கள் ‘ஓவர் மேக்அப்’ செய்துவிட்டால் அதுவும் சரிவராது.
கலரான பெண்களை பார்க்கும்போது நாமும் அதுபோல் ஆகவேண்டும் என்ற ஆசை சில பெண்களுக்கு ஏற்படும். அந்த ஆசை தவறானதல்ல. ஆனால் அதற்காக கடைப்பிடிக்கும் வழிமுறை தவறாகிவிடக் கூடாது. கலராக தோன்ற விரும்புகிறவர்கள் இளம் நிறத்திலான பவுண்ட்டேஷனை முகத்தில் நிறைய பூசிவிடுவார்கள். அந்த நிகழ்ச்சியில் எடுத்த போட்டோக்களை பார்க்கும்போதுதான் அதிகம் பூசியிருப்பது தெரியவரும்.
பவுண்ட்டேஷன் தேர்ந்தெடுக்கும்போது மிகுந்த கவனம் தேவை. சருமத்திற்கு பொருத்தமானதை பரிசோதனை செய்து பார்த்து வாங்கவேண்டும். கை மணிக்கட்டில் புரட்டிப்பார்த்து சோதிக்காமல், முகத்தின் ஏதாவது ஒரு பகுதியில் பூசிப்பார்த்து வாங்குவதே சரியானது.
சிலர் முகத்தில் நிறைய பவுடர் பூசிக்கொள்வார்கள். அது சிறிது நேரத்தில் முகத்தில் ஒட்டிக்கொள்ளும். எண்ணெய்த்தன்மை கொண்ட சருமம் உடையவர்கள்தான் முகத்திற்கு அதிகம் பவுடர் பூசுவார்கள். அளவுக்கு அதிகமாக பவுடர் பூசும்போது சருமம் வறண்டு, பார்க்க அழகற்றதாகிவிடும். காலப்போக்கில் இயல்பான ஜொலிப்பும் மங்கிவிடும். அதனால் பெண்கள் பவுடருக்கு பதில் காம்பாக்ட் பயன்படுத்தலாம்.
இன்றைய இளம்பெண்கள் தங்கள் கண்களை அழகு படுத்துவதற்குதான் அதிக நேரத்தை செலவிடுகிறார்கள். முதலில் புருவத்தில் கவனம் செலுத்துகிறார்கள். புருவ முடிகள் எளிதாக ஒரு அமைப்புக்குள் வருவதில்லை. புருவ முடிகள் கட்டுக்குள் வராவிட்டால் புரோஷேப்பர், புரோ ஜெல், வாஸ்லின் போன்ற ஏதாவது ஒன்றை பயன்படுத்தி அதை சரிசெய்யலாம். வளர்ந்து நிற்கும் சிறிய ரோமங்களை ட்ரிம் செய்யவோ டீசர் மூலம் நீக்கவோ செய்யலாம். அடர்த்தியான புருவமாக இருந்தால் அதே நிறத்திலான ஐபுரோ பென்சில் மூலம் லைட் ஷேடு கொடுத்தால் போதும்.
உதடுகள் இயற்கையிலே அழகு கொண்டவை. அதை பேரழகாக்க விரும்புகிறவர்கள் ஒரு சொட்டு லிப்குளோஸ் போட்டால் போதும். கண்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து மேக்அப் செய்திருந்தால் உதடுகளுக்கு இளம் நிற லிப்குளோஸ் பொருத்தமாக இருக்கும். இளம் வயதுகொண்டவர்கள் கிளீயர் கோட் பூசி உதட்டு அழகை மேம் படுத்தலாம். லிப்ஸ்டிக் பயன்படுத்துகிறவர்கள் அதே ஷேடு கொண்ட லிப்லைனர் பயன்படுத்த வேண்டும். அவ்வாறு செய்தால் உள்ளத்தை கொள்ளை கொள்ளும் அளவுக்கு உதடுகள் அமையும்.