கங்கை அமரனின் மனைவியும், வெங்கட் பிரபு, பிரேம்ஜியின் தாயாருமான மணிமேகலை இறப்புக்கு நடிகர் சிம்பு இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
கங்கை அமரனின் மனைவியும், வெங்கட் பிரபு, பிரேம்ஜியின் தாயாருமான மணிமேகலை நேற்று இரவு காலமானார். அவருக்கு வயது 69. உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், நேற்றிரவு 11:30 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவிற்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
நடிகர் சிம்பு வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில், அன்பு இயக்குநர் வெங்கட் பிரபு மற்றும் நண்பர் பிரேம்ஜி, யுவன் உட்பட என் சகோதரர்களான உங்களுக்கு எப்படி ஆறுதல் கூறுவது எனத் தெரியவில்லை…
எதையும் சாதாரணமாக எளிமையாக எடுத்துக் கொண்டு செல்பவர்கள் நீங்கள். கடந்த இரண்டு வருடமாக, இதற்கு முன் நட்பாக இணைந்திருந்தாலும்.. இந்த இரண்டு வருடம் இணைந்து பணிபுரியும் போது எவ்வளவு அழகாக, எளிமையாக, எந்த சூழ்நிலையையும் கடந்து செல்கிறீர்கள் எனப் பார்த்திருக்கிறேன்.
ஆனால், அம்மா மீது மிகுந்த அன்பு கொண்ட உங்களுக்கு இதைக் கடப்பது என்பது எவ்வளவு கடினம் என்பதறிவேன். அம்மாவின் இழப்பு நிச்சயம் நம்ப முடியாத ஒன்று. ஆறுதல் சொல்ல முடியாத ஒரு இழப்பு.
அப்பாவிற்கும், குடும்பத்திற்கும், உங்களனைவருடனும், இழப்பையும்… வேதனையையும் பகிர்ந்துகொள்கிறேன். அம்மாவின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். கண்ணீருடன் சிலம்பரன் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.