இலங்கையில் கோவிட் நோயாளர்கள் மேலும் அதிகரித்தால் நாட்டை முழுமையாக முடக்க வேண்டியிருக்கலாம் என்பதால் அத்தியாவசிய சேவைகள் அனைத்தும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
அத்துடன், அனைத்து அத்தியாவசிய சேவைகளையும் மட்டுப்படுத்தப்பட்ட பணியாளர்களுடன் தயார் நிலையில் இருக்குமாறும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
அத்தியாவசிய சேவைகள் தொடர்பான ஜனாதிபதி செயலணியின் பிரதானி பஸில் ராஜபக்ஸ தலைமையில் அலரிமாளிகையில் அத்தியாவசிய சேவைகள் பணிக்குழுவுடன் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலில் நாட்டில் காணப்படும் சுகாதார நெருக்கடி குறித்து தீவிரமாக ஆராயப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் தற்போது கோவிட் நோயாளர்கள் காணப்படுகின்றனர் எனத் தெரிவித்துள்ள சுகாதார அதிகாரிகள், கடுமையான சுகாதார வழிகாட்டுதல்களை நடைமுறைப்படுத்தாவிட்டால் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் எனவும், இது நாட்டின் சுகாதாரத்துறையினரின் மீது கடுமையான பாதிப்பை ஏற்படுத்தலாம் எனவும் தெரிவித்துள்ளனர்.
இந்தநிலையில், கோவிட் வைரஸ் பரவல் காரணமாக இம்முறை வெசாக் தினக் கொண்டாட்டங்கள் இரத்துச் செய்யப்பட்டுள்ள நிலையில், இவ்வாரம் முஸ்லிம்கள் நோன்புப் பெருநாளையும் வீடுகளிலேயே கொண்டாடுமாறும் சுகாதார அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
நாட்டில் கடந்த சில நாட்களாக கோவிட் நோயாளர்களின் எண்ணிக்கை என்றுமில்லாதவாறு அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.