நாடு பூராகவும் கோவிட் தொற்று தீவிரமாகப் பரவி வரும் நிலையில் யாழ் மாவட்டத்தில் தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் முகமாக யாழ் நகரப் பகுதியில் மக்கள் அதிகளவில் ஒன்று கூடும் இடங்களில் கிருமித்தொற்று நீக்கம் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த நடவடிக்கை இராணுவத்தினரால் இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
யாழ் மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேராவின் வழிகாட்டுதலின் கீழ் இராணுவத்தின் 51வது படைப்பிரிவு தளபதியின் நெறிப்படுத்தலில், 512வது பிரிகெட் பிரிவால் யாழ்ப்பாண நகரப் பகுதி நீர் ஊற்றிக் கழுவப்பட்டு கிருமித் தொற்று நீக்கி மருந்து விசிறும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
யாழ் நகரில் பொதுமக்கள் அதிகமாக ஒன்றுகூடும் யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையம், கஸ்தூரியார் வீதி, மின்சார நிலைய வீதி, ஆஸ்பத்திரி வீதி ஆகிய வீதிகள் இன்று காலை இராணுவத்தினரால் நீர் ஊற்றி சுத்தம் செய்யப்பட்டு கிருமித் தொற்று நீக்கி மருந்து விசிறும் செயற்பாடு இடம்பெற்றுள்ளது.
யாழ் மாவட்டத்தில் அண்மைய நாட்களில் தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் முகமாக யாழ்ப்பாண மாவட்டத்தின் அனைத்து இடங்களிலும் இராணுவத்தினரால் இவ்வாறான செயற்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.