கோவிட் வைரஸ் தடுப்பூசிகள் தொடர்பில் இலங்கை அமெரிக்காவிடம் கோரிக்கையை முன் வைத்திருக்கிறது.
இது தொடர்பில் அமெரிக்காவுக்கான இலங்கை தூதுவர் ரவிநாத ஆரியசிங்க அமெரிக்க அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு வந்திருக்கின்றார்.
கடந்த ஏப்ரல் 26ஆம் திகதியன்று அமெரி;க்க அரசாங்கம் சுமார் 60 மில்லியன் எஸ்ட்ரா செனேகா குப்பிகளை ஏனைய நாடுகளுக்கு வழங்கப்போவதாக அறிவித்தல் ஒன்றை விடுத்திருந்தது.
இதனையடுத்தே இலங்கையின் வெளியுறவு துறை அமைச்சர் தினேஸ் குணவர்தன கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதுவர் எலைனா பி டெப்லிட்சிடம் இது தொடர்பான கோரிக்கையை முன் வைத்தார்.
இதன் தொடர்ச்சியாகவே அமெரிக்காவில் உள்ள இலங்கைத் தூதுவர் ரவிநாத ஆரியசிங்க அமெரிக்க அரசாங்கத்தின் கவனத்திற்கு இந்த கோரிக்கையை கொண்டு சென்றுள்ளார்.
இலங்கையில் ஏற்கனவே சுமார் 6 லட்சம் எஸ்ட்ரா செனேகா குப்பிகள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளன.
எனவே அவர்களுக்கு இரண்டாவது தடவையாக வழங்குவதற்கு எஸ்ட்ரா செனேகா குப்பிகள் தேவைப்படுகின்றன.
இந்த நிலையில் அமெரிக்கா ஏனைய நாடுகளுக்கு தருவதாக கூறியுள்ள எஸ்ட்ரா செனேகா குப்பிகளில் இலங்கைக்கும் ஒரு பகுதியை பெற்றுக் கொள்வதற்காகவே இலங்கை அமெரிக்காவிடம் தற்பொழுது தொடர்புகளை ஏற்படுத்தியிருக்கிறது.