தமிழகம் முழுவதும் தளர்வு இல்லாத முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதால் போலீசார் நடவடிக்கை கடுமையாக்கப்பட்டுள்ளது.
சென்னை:
தமிழ்நாட்டில் கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது குறித்து மருத்துவ நிபுணர்கள், உயர் அதிகாரிகள், மாவட்ட கலெக்டர்கள், சட்டமன்ற குழு உறுப்பினர்கள் உள்ளிட்டவர்களை கலந்து பேசி முக்கிய முடிவுகளை எடுத்து வருகிறார்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து மருத்துவ வசதிகளும் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மக்கள் நடமாட்டம் அதிகம் இருப்பதால் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. எனவே முழு ஊரடங்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கருத்து தெரிவித்தனர்.
இதையடுத்து மக்கள் நடமாட்டத்தை குறைக்க தமிழகத்தில் படிப்படியாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
ஆரம்பத்தில் காலை 6 மணி முதல் மதியம் 12 மணிவரை மளிகைக்கடைகள், காய்கறி கடைகளை திறக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது. பின்னர் காலை 10 மணிவரை மட்டுமே இந்த கடைகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இரு சக்கர வாகனங்களில் செல்வோருக்கும் இ-பாஸ், இ-பதிவு என்று பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
போலீசார் பொதுமக்களிடம் மென்மையாக நடந்து கொள்ள வேண்டும் என்று போலீஸ் டி.ஜி.பி. திரிபாதி வேண்டுகோள் விடுத்தார். எனவே ஆரம்பத்தில் போலீசார் கடும் நடவடிக்கைகள் எடுக்கவில்லை. அறிவுரைகள் கூறி வந்தனர்.
கடந்த 10-ந் தேதி முதல் 24-ந் தேதிவரை ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. என்றாலும், இதற்கு எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை. தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கும் நோயாளிகள் எண்ணிக்கை தினமும் 35 ஆயிரமாக இருந்தது. இதையடுத்து ஊரடங்கில் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டன.
போலீஸ் நடவடிக்கையும் தீவிரமானது. முறையான ஆவணங்கள் இல்லாத வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கட்டுப்பாடுகளை மீறியவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. முககவசம் அணியாதவர்களுக்கு மாநகராட்சி சார்பில் அபராதம் விதிக்கப்பட்டது. விதிமுறைகளை மீறி திறந்த கடைகள் சீல் வைக்கப்பட்டன. அபராதமும் விதிக்கப்பட்டது.
பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தும் எதிர்பார்த்த அளவு மக்கள் நடமாட்டம் குறையவில்லை. எனவே பல்வேறு ஆலோசனைகளுக்குப் பிறகு இன்று முதல் வருகிற 31-ந் தேதி வரை ஒரு வாரம் தளர்வுகள் இல்லாத ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக நேற்று முன்தினமும், நேற்றும் அனைத்து கடைகளும் காலை 6 மணி முதல் இரவு 9 மணிவரை திறக்க அனுமதிக்கப்பட்டது.
இதன் காரணமாக கடந்த 2 நாட்களாக தமிழகத்தின் அனைத்து ஊர்களிலும் முக்கிய பகுதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது.
இந்தநிலையில் இன்று காலை முதல் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட் டுள்ளது. பால் வினியோகம், மருந்து கடைகள், பெட்ரோல் நிலையங்கள் தவிர அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன. ஓட்டல்களில் குறிப்பிட்ட நேரம் வரை பார்சல் மட்டும் வழங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனவே அவை தடையின்றி நடந்தன.