கனேடிய அரசின் கொரோனா விதிகளுக்கு கட்டுப்பட்டு சுய தனிமைப்படுத்திக் கொண்ட நிலையில், சோதனைக்கான மாதிரிகள் தொடர்பில் தமக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கனேடியர் ஒருவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
கனேடியரான Tim Squires அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தில் வசித்து வருகிரார். ஆனால் தற்போது ஒன்ராறியோவின் Guelph பகுதியில் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
நயாகராவில் ஒரு நோய்வாய்ப்பட்ட குடும்ப உறுப்பினர் மற்றும் அவரது குழந்தைகளைப் பார்க்கவே தற்போது கனடாவுக்கு திரும்பியுள்ளார்.
கனடா எல்லையை தாண்டும் முன்னர் தாம் கொரோனா சோதனை எடுத்துக் கொண்டதாகவும், மே 12ல் வின்ட்சர் எல்லையை கடக்கும் போதும் கொரோனா சோதனை முன்னெடுத்ததாக Tim Squires தெரிவித்துள்ளார்.
மேலும் சுய தனிமைப்படுத்தலின் 8வது நாள் மீண்டும் ஒருமுறை கொரோனா சோதனை முன்னெடுக்க தேவையான பொருட்களை அதிகாரிகள் தரப்பு தமக்கு அளித்திருந்ததாகவும், அது தற்போது புதிய சிக்கலை ஏற்படுத்தியுள்ளதாகவும் Tim Squires தெரிவித்துள்ளார்.
இவர் தங்கியிருந்த விடுதியில் இருந்து சோதனைக்கான மாதிரிகளை எடுத்துச் செல்ல வேண்டிய நபர் முகவரி தொடர்பிலான குழப்பம் காரணமாக தாமதித்துள்ளார்.
கடந்த புதன்கிழமை சோதனை முடித்து மாதிரிகளை பத்திரமாக பெட்டிக்குள் வைத்து உரிய அதிகாரிகளுக்கும் தகவல் அளித்துள்ளார்.
ஆனால் முகவரி குளறுபடியால், வியாழக்கிழமை பகல் 10 மணிக்கு மாதிரிகளை சேகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், வியாழக்கிழமை மதியம் 2.30 மணியளவில் மாதிரி எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.
ஆனால் அரசாங்க விதிகளின் படி, 24 மணி நேரத்தில் சோதனைக்கான மாதிரிகள் ஒப்படைக்கப்பட வேண்டும்.
தற்போது தாமதம் நேர்ந்துள்ளதால் 3,000 டொலர் அபராதம் விதிக்க நேரிடும் என கனேடிய நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த அபராதம் விதிப்பு தம்மை மொத்தமாக பாதித்துள்ளது என்கிறார் பாதிக்கப்பட்ட Tim Squires.