யாழ்.நல்லுார் இராமசாமி பரியாரியார் சந்தியை அண்மித்த பகுதியில் உள்ள மதுபானசாலை பொலிஸாரினால் முற்றுகையிடப்பட்டு அங்கு கூடியிருந்த குடிமகன்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன் பெருமளவு மதுபான போதல்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன் வாங்க வந்தவர்கள், விற்றவர் என அனைவரும் கைது செய்யப்பட்டள்ளனர். நாட்டில் பயணத்தடை தளர்த்தப்பட்டுள்ள நிலையில் மதுபான விற்பனை நிலையங்களை திறக்க தடை விதிக்கப்பட்டிருக்கின்றது.
இந்நிலையில் குறித்த மதுபான விற்பனை நிலையத்தில் இரகசியமாக மதுபானம் விற்பனை செய்யப்பட்டுவந்துள்ளது. அது தொடர்பில் புலனாய்வு பிரிவினருக்கு தகவல் கிடைத்த நிலையில் மதுபானசாலையை பொலிஸார் முற்றுகையிட்டனர்.
இதன்போது மதுபானம் வாங்க வந்திருந்த ஒருவர் மற்றும் மதுபானசாலை முகாமையாளர், மற்றும் விற்பனை செய்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் 100 கால் போத்தல்கள், 4 முழு போத்தல்கள், 8 பியர்கள் மீட்கப்பட்டதுடன் கைது செய்யப்பட்டவர்கள் மேலதிக விசாரணைக்காக கோப்பாய் பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை குறித்த மதுபான சாலையில் பயணத் தடை விதிக்கப்பட்ட நிலையில் அதிக விலைக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றமையும் இங்கு குறிப்பிடத்தக்கது