குரங்குகளுக்கு உணவளித்து வந்த நபர் ஒருவர் கொரோனாவால் உயிரிழந்த நிலையில், இறந்தது தெரியாத குரங்குகள் அவரை தேடிவந்து கூச்சலிடும் சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சத்தியமங்கலம் அடுத்துள்ள வடவள்ளியை சேர்ந்தவர் ராமலிங்கம் (65). இவர் கடந்த 6 ஆண்டுகளாக தனது வீட்டிற்கு பின்னால் இருக்கும் தோட்டத்தில் இருந்து வரும் குரங்குகளுக்கு தினமும் உணவு, பழம், நீர் போன்றவற்றை கொடுத்து வந்துள்ளார்.
இதனால் நாளடைவில் குரங்குகள் ராமலிங்கத்துடன் நெருக்கமாக பழக ஆரம்பித்துள்ளன. குழந்தைபோல் அவர் தோளிலும், மடியிலும் ஏறி குரங்குகள் விளையாடவும் செய்துள்ளன.
இவ்வாறு தினமும் குரங்குகளை கவனித்து வந்த ராமலிங்கம் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.
ராமலிங்கம் உயிரிழந்தது தெரியாமல் இன்று காலை அவரை தேடி வந்த குரங்குகள் கூட்டம் அவர் இன்னும் வரவில்லை என மரங்களின் மீது ஏறி கூச்சலிட்டு வருகின்றது.



















