கோவிட்டால் இறக்கிறோமோ இல்லையோ உணவின்றி இறக்கப்போகிறோம் என முல்லைத்தீவு மாவட்ட முடக்கப்பட்ட பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட மக்கள் இன்று ஒன்றுகூடி எதிர்ப்பை வெளிப்படுத்த வந்த நிலையில், பிரதேச செயலக அதிகாரிகள் வந்து அவ்வாறான சம்பவங்கள் இனி நடக்கவிடாது பார்ப்பதாகவும் உரிய வகையில் உதவித்திட்டங்களை பெற்றுத்தர ஆவண செய்வதாகவும் தெரிவித்த நிலையில் மக்கள் களைந்து சென்றுள்ளனர்.
அப்போது அங்கு ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்தபோதே இவ்வாறு தெரிவித்துள்ளனர்.
முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள புதுக்குடியிருப்பு ஆடைத்தொழில்சாலையில் பணிபுரிபவர்களுக்கு ஏற்பட்ட கோவிட் கொத்தணியில் பலருக்குத் தொற்று இனங்காணப்பட்டதன் காரணமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு, முள்ளியவளை பொலிஸ் பிரிவுகள் கடந்த 17-05-2021 அன்று முற்றாக முடக்கப்பட்டுள்ளன.
இருப்பினும் கடுமையான பாதிப்புக்கள் இருந்த 11 கிராம அலுவலர் பிரிவுகள் தவிர்ந்த ஏனைய கிராம அலுவலர் பிரிவுகள் கடந்த 21-05-2021 அன்று முடக்க நிலையிலிருந்து விடுவிக்கப்பட்டது.
இருப்பினும் தொடர்ந்து பயணக்கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் நாளாந்த கூலித்தொழிலை நம்பிவாழும் பல குடும்பங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
இதேவேளைக் கடந்த 17-05-2021 முதல் திடீரென எந்த அறிவித்தலுமின்றி முடக்கப்பட்டுள்ள புதுக்குடியிருப்பில் 9 கிராம அலுவலர் பிரிவுகளிலும் முள்ளியவளையில் இரண்டு கிராம அலுவலர் பிரிவுகளிலும் உள்ள மக்கள் அத்தியாவசிய உணவுப்பொருட்கள் இன்றி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்
இந்நிலையில் முடக்கப்பட்ட நிலையில் காணப்படும் புதுக்குடியிருப்பு பத்தாம் வட்டார மக்கள் தெரிவிக்கையில்,
தாம் கோவிட்டால் இறக்கிறோமோ இல்லையோ உணவின்றி இறக்கப்போகிறோம்.
எமக்கு இன்றுவரை எந்த உலருணவு பொருட்களும் கிடைக்கவில்லை இப்பகுதியில் உள்ள சிலர் தமக்குப் பிடித்தவர்களுக்கு மாத்திரம் வெளிநாடுகளிலிருந்து வரும் நிதிகள் மூலம் உதவுகின்றனர்.
அதனை உரிய முறையில் பாதிக்கப்பட்டுள்ளவர்களை முன்னிலைப்படுத்தி வழங்க நடவடிக்கை எடுக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளனர்.
கோவிட்டால் இறக்கிறோமோ இல்லையோ உணவின்றி இறக்கப்போகிறோம். எனவே எமக்கு உலருணவு பொதிகளையாவது விரைவாகப் பெற்றுத் தருமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்.