பிரபல திரைப்பட நடிகையான சாந்தினி, அதிமுக முன்னாள் அமைச்சர் மீது பாலியல் புகார் கொடுத்துள்ள நிலையில், தங்கள் இருவருக்கும் எப்படி பழக்கம் ஏற்பட்டது என்பது குறித்து புகார் மனுவில் கூறியுள்ளார்.
நாடோடிகள் உட்பட பல திரைப்பட நடித்து பிரபலமான நடிகை சாந்தினி, நேற்று சென்னை வேப்பேரியில் உள்ள பொலிஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் தெரிவித்திருந்தார்.
இந்த புகார் மனுவில், நான் மலேசிய குடியுரிமை பெற்ற திருமணம் ஆகாத பெண். நான் மலேசிய சுற்றுலா வளர்ச்சி கழக தூதரகத்தில் வேலை செய்தபோது அடிக்கடி பணி நிமித்தமாக இந்தியா வந்து செல்வது வழக்கம்.
அதன்படி கடந்த 2017-ஆம் ஆண்டு தமிழக அரசின் அதிமுக அமைச்சரவையில் தொழில் நுட்பத்துறை அமைச்சராகவும் ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் மணிகண்டன், சுற்றுலா வளர்ச்சி துறை சம்பந்தமாக என்னை பார்க்க விரும்புவதாக எனக்கு தெரிந்த பிஆர்ஓ பரணி மூலம் கூறினார்.
அதன் படி, நான் 3.5.2017-ஆம் திகதி அன்று அமைச்சர் மணிகண்டனை அவரது வீட்டில் சந்தித்து பேசினேன். அப்போது அவர், மலேசியாவில் தொழில் முதலீடு செய்ய போவதாகவும், அதுதொடர்பாக பேச வேண்டும் என்றும் கூறி எனது செல்போன் நம்பரை பெற்றுக்கொண்டார்.
அதன் பிறகு அடிக்கடி எனக்கு போன் செய்து தனிப்பட்ட முறையில் பேச ஆரம்பித்த அவர், நான் மிகவும் அழகாக இருப்பதாகவும், குடும்ப வாழ்வில் அவர் மனைவியால் எந்த சந்தோஷமும் இல்லை என்றும் அவருடைய மனைவி மிகவும் கொடுமைக்காரி என்றும், என்னை போன்ற ஒரு அழகான பெண் இல்லற வாழ்வில் இருந்தால் என்னுடைய வாழ்க்கை மிகவும் அழகாக இருக்கும் என்றும் கூறினார்.
அவர் என்னை சட்டப்படி திருமணம் செய்து கொள்வதாக உறுதியளித்தார். இதையடுத்து, இருவரும் சென்னை பெசன்ட் நகர் மதுரிதா அப்பார்ட்மென்டில் வசித்து வந்தோம். அவர் சென்னை வரும் போது இங்கு தான் வந்து தங்குவார். நான் எங்கு வெளியில் சென்றாலும், அவர் பயன்படுத்திய காரை தான் பயன்படுத்தி வந்தேன். அவருடைய டிரைவர் ராம்குமார் தான் எனக்கும் டிரைவராக இருப்பார்.
நாங்கள் இருவரும் ஒன்றாக சேர்ந்து கணவன், மனைவியாக ராமேஸ்வரம், புதுச்சேரி, திருநெல்வேலி மற்றும் டெல்லி தமிழ்நாடு இல்லம் என பல இடங்களுக்கு சென்று வந்துள்ளோம். தூத்துக்குடியில் தேர்தல் பிரசாரத்துக்கும் அவருடன் சென்றுள்ளேன். திருமணம் செய்ய வற்புறுத்தியபோது அவர், மனைவியை சட்டப்படி விவாகரத்து செய்துவிட்டு என்னை திருமணம் செய்வதாக கூறுவார்.
நான் 3 முறை கருவுற்றேன். நான் கருவுற்ற 3 முறையும், உன்னை முறைப்படி திருமணம் செய்து கொண்ட பிறகு நாம் குழந்தை பெற்றுக்கொள்ளலாம் என்று என்னை மூளை சலவை செய்து 3 முறையும் அவரது நண்பரான மருத்துவர் அருண், கோபாலபுரத்தில் நடத்தி வரும் மருத்துவமனையில் கருக்கலைப்பு செய்தார்.
இந்நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் 15-ஆம் திகதி வரை என்னுடன் வாழ்ந்து வந்த அவர், சொந்த ஊருக்கு சென்ற பிறகு என்னை மிரட்ட ஆரம்பித்தார். இது குறித்து கேட்டால், நீ உன் சொந்த நாட்டிற்கு சென்று விடு, இல்லை என்றால் உனக்கு தெரியாமல் எடுத்த அனைத்து அரை நிர்வாண படங்களையும் சமூக வலைதளம் மற்றும் இன்டர்நெட்டில் விட்டுவிடுவேன் என்று மிரட்டுகிறார்.
நான் குளிக்கும் சமயம் எனக்கு தெரியாமல் எடுத்த ஆடையில்லாத போட்டோவை எனக்கு டெலகிராம் மூலம் அனுப்பினார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த நான், நான் அந்த போட்டோவை அழித்துவிடும் படி கெஞ்சினேன்.
ஆனால், மணிகண்டன், பரணி என்பவர் மூலம் எனக்கு கொலை மிரட்டல் விடுத்தார். மேலும், என் மீது பொய் வழக்கு போடுவதாகவும் என்னிடம் இருந்து எடுத்த காசோலை ஒன்று அவரிடம் இருப்பதாகவும், அதை வைத்து என் மீது மோசடி வழக்கு பதிவு செய்வதாகவும், ரவுடிகளை வைத்து கொலை செய்து விடுவதாகவும் எனக்கு தொடர்ந்து மிரட்டல் விடுத்து வருகிறார்.
எனவே போலீஸ் கமிஷனர் என் மனுவை விசாரணை செய்து என்னை திருமணம் செய்வதாக கூறி 5 ஆண்டுகள் ஒரே வீட்டில் குடும்பம் நடத்தி எனது அந்தரங்க படங்களை வைத்து மிரட்டல் விடுத்து வரும் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த பரணி ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து மணிகண்டன் கூறுகையில், நான் அமைச்சராக இருந்தபோது பலர் என்னுடன் போட்டோ எடுத்துக் கொண்டுள்ளனர். அந்த வகையில் அந்தப்பெண்ணும் ஏதாவது ஒரு நிகழ்ச்சியில் என்னுடன் சேர்ந்து போட்டோ எடுத்திருக்கலாம். அவர் யார் என்றே எனக்கு தெரியாது. கடந்த சில நாட்களுக்கு முன்பு, வழக்கறிஞர் ஒருவர் என்னிடம் போனில் தொடர்பு கொண்டார்.
சில போட்டோக்கள் என்னிடம் உள்ளது. பொலிசில் புகார் அளித்தால், உங்கள் இமேஜ் போய் விடும். சென்னையில் நேரில் சந்தித்து பேச வேண்டும் என்றார். எனது வழக்கறிஞருடன் அவரை சந்தித்தேன். அப்போது அவர் சில போட்டோக்களை காட்டினார். அதற்கு பணம் கேட்டார்.
இது முழுவதும் மார்பிங் செய்யப்பட்டுள்ளது. எனக்கும் இதற்கும் சம்பந்தமில்லை என கூறினேன், விடாப்பிடியாக பணம் கேட்டார். முதலில் 5 கோடி ரூபாய் கேட்டார். கடைசியாக 10 லட்சம் ரூபாய் கேட்டார்.
இது பணம் பறிக்கும் கும்பல் என தெரிந்து கொண்டு கிளம்பி வந்துவிட்டோம். முழு ஊரடங்கு நேரம், கொரோனா பரவல் அச்சம் காரணமாக அந்த வழக்கறிஞர், அந்த பெண் மீது அப்போது காவல்துறையில் புகார் அளிக்கவில்லை, இதை சட்டப்படி சந்திப்பேன் என்று விளக்கமளித்துள்ளார்.