கோவிட் தடுப்பூசியைப் பெறுவதாகத் தெரிவித்துவரும் வட்ஸ்அப் அல்லது குறுஞ்செய்தியை நம்பி மக்கள் ஏமாற வேண்டாம் என்று பொதுமக்களுக்கு சுகாதார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.
தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ள முன்பதிவு செய்யுமாறு சுகாதார அமைச்சால் இதுவரை எந்த நடைமுறையும் முன்னெடுக்கப்படவில்லை என்று சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.
சில நிறுவனங்கள் இதுபோன்ற பதிவு நடைமுறைகளைத் தொடங்கியுள்ளன என்று தங்களுக்குத் தகவல் கிடைத்தது எனவும், இருப்பினும் அவை குறித்து அந்த நிறுவனங்கள் சுகாதார அமைச்சுக்கு அறிவிக்கவில்லை எனவும் அவர் கூறினார்.
இந்த நடவடிக்கை ஆரோக்கியமானவை அல்ல எனக் குறிப்பிட்ட வைத்தியர் ஹேமந்த ஹேரத், தடுப்பூசி செலுத்தும் சுகாதார ஊழியர்களின் கடமைகளுக்கு இடையூறு விளைவிக்காமல் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
ஆகவே, தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ள பொதுமக்கள், அந்தந்தப் பகுதிகளில் உள்ள சுகாதார அமைச்சு மற்றும் சுகாதார மருத்துவ அதிகாரி ஆகியோரை மட்டுமே நம்புமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.