மகளின் காதல் விவகாரம் பிடிக்காத தந்தை அவரின் காதலனை கொன்று புதைத்த அதிர்ச்சி சம்பவம் ஆந்திர மாநிலத்தில் அரங்கேறியுள்ளது.
ஆந்திர மாநில சித்தூர் மாவட்டம் போங்கராகுண்டா கிராமத்தை சேர்ந்தவர் தனசேகர் ( வயது 23). வெளியூரில் வேலைப்பார்த்து வந்த தனசேகர் கொரோனா ஊரடங்கு காரணமாக சொந்த ஊரில் இருந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 22-ம் தேதி முதல் தனசேகரை காணவில்லை. அவரது குடும்பத்தினர் எங்குத்தேடியும் தனசேகரை கண்டுபிடிக்க முடியவில்லை.
இதனையடுத்து காவல்நிலையத்தில் புகார் தெரிவித்தனர். காவல்துறையினர் விசாரணையில் இறங்கினர்.தனசேகர் அதேப்பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். இந்த விவரம் போலீஸாருக்கு தெரியவர அந்தப்பெண்ணின் உறவினர்கள் மீது சந்தேகப்பார்வையை திருப்பியுள்ளனர்.
தனசேகரின் மொபைல்போனை ஆய்வு செய்ததில் மே 22-ம் தேதி அந்தப்பெண்ணின் தந்தை பாபு என்பவருக்கு அதிக முறை போன் செய்தது தெரியவந்தது.
இதனையடுத்து பாபுவிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் தனசேகரை கொலை செய்து தன்னுடைய வயலில் புதைத்து விட்டதாக பாபு கூறியுள்ளார்.
காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில், பாபுவுக்கு சொந்தமாக விவசாய நிலம் உள்ளது. வயலுக்கு இரவு காவலுக்கு பாபு சென்றுள்ளார். ஏதோ காரணத்தால் பாபு மீண்டும் வீட்டுக்கு திரும்பிவிட்டார்.
அப்போது மகளின் அறையில் சத்தம் கேட்டுள்ளது. தனது மகளுடன் தனசேகர் இருந்ததை பார்த்து பாபு ஆத்திரமடைந்துள்ளார்.
பாபு தாக்கியதில் தனசேகர் இறந்துவிட்டார். இதனையடுத்து அந்த ஊரில் உள்ள பாழடைந்த கிணற்றில் தனசேகரின் உடலை தூக்கி வீசியுள்ளார். அடுத்தநாள் காலையில் சென்று பார்த்த போது தண்ணீரில் ஊறிய உடல் மேலே மிதந்துள்ளது.
பாழடைந்த கிணற்றில் உடல் மிதப்பதை ஊர் மக்கள் யாராவது பார்த்துவிட்டால் பிரச்னை ஏற்படும் என உணர்ந்த பாபு கிணற்றில் இருந்து உடலை மீட்டுள்ளார்.
இதனையடுத்து தனசேகரின் உடலை துண்டு துண்டாக வெட்டி அதனை தன்னுடைய நிலத்தில் புதைத்தது தெரியவந்துள்ளது. பாபுவை கைது செய்த போலீஸார் அவரை சிறையில் அடைத்துள்ளனர்.