சொந்த செலவிலேயே ஹெலிகாப்டருடன் வாடகைக்கு எடுத்து வந்து போலீசில் சரணடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
நியூசிலாந்து நாட்டின் வடக்கு பகுதி, ஓடாகோ பிராந்திய பகுதியை சேர்ந்தவர் ஜேம்ஸ் பிரையண்ட்(32). இவர் தன்னுடன் அறையில் தங்கியிருக்கும் நபர்களுடன் ஏற்பட்ட தகராறில், அவர்களை கத்தியால் குத்தியுள்ளார்.
இதையடுத்து, இந்த விஷயம் தொடர்பாக ஜேம்ஸின் மீது 3 பிரிவுகளின் கீழ் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்த நிலையில், கைதாகுவதற்கு முன்னதாகவே தலைமறைவாகியுள்ளார்.
மேலும், தலைமறைவான ஜேம்ஸ் கடந்த 5 வாரமாக அங்குள்ள வயநகருவா நகரின் வனப்பகுதியில் பதுங்கி இருந்துள்ளார். இதனிடையே, ஜேம்ஸ் பிரையண்ட் ஆபத்தான நபர் என பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கபடவே, உள்ளூர் தொலைக்காட்சியிலும் தேடப்படும் நபராக அவர் அறிவிக்கப்பட்டார்.
இதனால், ஜேம்ஸ் சரணடைய முடிவு செய்து, வழக்கறிஞரின் உதவியுடன் அமைதியான முறையில் சரணடைய முடிவு செய்துள்ளார். தான் தங்கியிருந்த வனப்பகுதியில் இருந்து காவல் நிலையத்திற்கு செல்ல சொந்த செலவில் ஹெலிகாப்டர் வாடகைக்கு எடுத்து காவல் நிலையத்திற்கு சென்றார்.
இதன்பின்னர், பத்திரிகையாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ஜேம்ஸ், ” காடுகளில் இருந்த நாட்கள் நன்றாக இருந்தது, தினமும் யோகா செய்தேன்” என்று தெரிவித்தார். அவரை காவல் துறையினர் கைது செய்தனர்.



















