வர்த்தகர் ஒருவரின் இறுதி கிரியை நடைபெற்று சில மணி நேரங்களில் அவரது மகன், மருமகள் உட்பட குடும்பத்தை சேர்ந்த 4 பேர் கோவிட் தொற்றாளிகள் என தெரியவந்ததை அடுத்து, உடல் வைக்கப்பட்டிருந்த மலர்சாலையில் பணிப்புரிந்து வந்த 6 பேரை மலர்சாலையிலேயே தனிமைப்படுத்த மீரிகம சுகாதார அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
மீரிகம பிரதேசத்தை சேர்ந்த முன்னணி நிறுவனம் ஒன்றின் உரிமையாளர் கடந்த வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.
கிராம சேவகரின் பரிந்துரைக்கு அமைய உடல் மலர்சாலையில் வைக்கப்பட்டு இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது.
இறந்தவரின் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் இதில் கலந்துக்கொண்டனர். இறந்தவரின் உடல் அன்றைய தினமே தகனம் செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து பிற்பகல் மேற்கொண்ட மருத்துவப் பரிசோதனையில், இறந்தவரின் மகன், மருமகள், அவர்களின் இரண்டு பிள்ளைகளுக்கு கொரோனா தொற்றி இருப்பது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து சுகாதார அதிகாரிகள் மலர்சாலை உரிமையாளர் உட்பட 6 பேரை மலர்சாலையிலேயே தனிமைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.