ஒவ்வொரு உயிரினத்தின் ஆரோக்கியம் காப்பதற்காக இயற்கை மருத்துவ குணம் கொண்ட எண்ணற்ற மூலிகைகளை நமக்கு அருகாமையிலேயே கண்ணுக்கும் கைக்கும் எட்டும் தூரத்தில் படைத்துள்ளது.
மேலும், அவை சாலையின் ஓரங்களிலும், நீர்நிலைகள், வயல்வெளிகளின் வேலிகள், எதற்கும் பயன் இல்லாத தரிசு நிலங்களில் தாமாகவே வளர்ந்து வருகிறது.
நமக்கு தெரிந்த வகையில் தூதுவளை, முசுமுசுக்கை, முடக்கத்தான், அம்மான்பச்சரிசி, முக்கிரட்டை, கீழாநெல்லி, கரிசாலை, பிரண்டை, சோற்றுக்கற்றாழை, நித்தியகல்யாணி, சிறியாநங்கை, பெரியாநங்கை, துளசி, ஆவாரை, கறிவேப்பிலை, முருங்கை, அகத்தி, அருகம்புல், குப்பைமேனி, தும்பை, நொச்சி, மஞ்சள், வெற்றிலை உள்ளிட்டவற்றை கூறலாம்.
அந்த வகையில், கொடி வகையைச் சேர்ந்த முசுமுசுக்கை கீரை, சுவர்களிலும், தரைகளிலும் தானாக வளர்ந்திருக்கும். இது நுரையீரல் நோய்கள், சுவாசக் கோளாறுகளை நீக்க வல்லது. சுவாசக்குழல், சுவாசப்பையில் நுண்ணறைகளில் ஏற்படும் ரணம், அழற்சி, ஆகியவற்றை ஆற்றிவிடும் ஆற்றல் கொண்டது.
மேலும் சுவாசப்பைகளில் உண்டாகும் கபத்தை அகற்றி அதனை சுத்தம் செய்யும் சக்தி உடையது. இக்கீரையை நன்றாக ஆய்ந்து புழுங்கல் அரிசியுடன் சேர்த்து மாவாக அரைத்து தோசை, அப்பம் சுட்டு சாப்பிடலாம்.
இதனை வழக்கமாக உணவில் சேர்த்துக்கொள்ள நாள்பட்ட நோய்களால் தளர்ந்து போன உடல் பலமடையும், மனதில் அமைதியின்மை, கோபம் ஆகியவற்றையும் சரி செய்யக்கூடியது இந்த முசுமுசுக்கை கீரை.
முசுமுசுக்கை பொடியை தண்ணீர் கலந்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் இருமல் குணமாகும். முசுமுசுக்கையை சூரணமாக செய்து உட்கொள்ள நாள்பட்ட எலுப்புருக்கி, ஆஸ்துமா, காசநோய், இளைப்பு நோய், ரத்தசுவாசநோய் போன்றவை குணமடையும்.
பரட்டைக் கீரை, தூதுவளை, முசுமுசுக்கை மூன்றையும் சம அளவு எடுத்து உலர்த்தி பொடியாக்கி தினமும் காலை, மாலை இரு வேளையும் சாப்பிட்டால் ஆஸ்துமாவால் ஏற்படும் மூச்சிரைப்பு குறையும்.
சுவாசப் பைகளில் உண்டாகும் கபத்தை அகற்றி அதனை சுத்தம் செய்யும் சக்தி உடையது. முசுமுசுக்கையை தைலமாக தயாரித்து வாரம் ஒருமுறை எண்ணெய் குளியல் மேற்கொள்ள உடல் சூடு தணியும், கண் எரிச்சல் போக்கும்.