இலங்கையின் எதிர்கால முதலீட்டுத் திட்டங்களை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ சர்வதேச சமூகத்திடம் முன்வைத்தார்.
2021 இலங்கை முதலீட்டு மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே குறித்த திட்டங்களை ஜனாதிபதி முன்வைத்தார்.
மேலும், 2030 ஆம் ஆண்டளவில் தனிநபர் நிகர உற்பத்தியை 8000 டொலர்கள் வரை அதிகரிப்பதற்குத் தேவையான துரித பொருளாதார மாற்றத்திற்கான திட்டம் உள்ளதாகவும் அதற்கான நிலையான பொருளாதார கொள்கையைப் பேண அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்தார்.
கொழும்பு துறைமுக நகரத்தை உலகின் துரித அபிவிருத்தி பிராந்தியமாகவும் சேவை வழங்கும் மத்திய நிலையமாகவும் மாற்றுவதே தமது நோக்கம் என தெரிவித்தார்.
உற்பத்தி கைத்தொழில் துறையின் முதலீடுகளையும் நாம் ஊக்குவிக்கின்றோம். குறிப்பாக இலத்திரனியல் உதிரிப்பாகங்கள் தயாரிப்புத்துறை போன்றவற்றை ஊக்குவிக்கின்றோம். இதன் மூலம் இலங்கையின் தயாரிப்புகளை சர்வதேச சந்தைக்கு அனுப்பி வெற்றிகொள்ள எதிர்பார்க்கின்றோம்.
பூகோள அமைப்பு ரீதியாக இலங்கை மில்லியன் கணக்கான டெராபைட்ஸ் தரவுகளை பிறப்பிக்கும் கடல் கேபிள் கட்டமைப்பு அருகே அமைந்துள்ள நாடாகும். ஆகவே, பிராந்தியத்தின் தவல் தேவைகளை நிறைவேற்றும் தரவு மத்திய நிலையத்தின் எல்லையாக அமைகிறது.
அந்த சந்தர்ப்பத்தை மேலும் விரிவுபடுத்த தனிப்பட்ட தகவல் காப்பு குறித்த புதிய சட்டங்கள் வழிவகுத்துள்ளன. இந்த விதிமுறைகள் இலங்கையை சர்வதேச மட்டத்திற்கு உயர்த்தியுள்ளது என ஜனாதிபதி மாநாட்டில் மேலும் தெரிவித்தார்.