பிரசவத்துக்காக ஆஸ்பத்திரிக்கு சென்ற நிறைமாத கர்ப்பிணி விபத்தில் இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் புதுப்பட்டு பகுதியை சேர்ந்தவர் கண்ணன். இவரது மனைவி ஜெயலட்சுமி (வயது 23). இவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார்.
இவருக்கு இன்று அதிகாலை திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. அதனை தொடர்ந்து ஜெயலட்சுமியை அவரது மாமியார் செல்வி (52), நாத்தனார் அம்பிகா (33) மற்றும் உறவினர்கள் சிகிச்சைக்காக புதுப்பட்டு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.
அங்கு ஜெயலட்சுமிக்கு டாக்டர்கள் பரிசோதனை மேற்கொண்டனர். அதன் பின்னர் அவரை மேல் சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்சில் அனுப்பி வைத்தனர்.
அந்த ஆம்புலன்சில் ஜெயலட்சுமி, செல்வி, அம்பிகா, ஆஸ்பத்திரி செவிலியர்கள் மீனா (50), தேன்மொழி (27) ஆகியோரும் சென்றனர். ஆம்புலன்சை சங்கராபுரம் ஆரூர் பகுதியை சேர்ந்த கலியமூர்த்தி (36) என்பவர் ஓட்டி சென்றார்.
அந்த ஆம்புலன்ஸ் இன்று அதிகாலை கள்ளக்குறிச்சி அரியபெருமானூர் ஏரிக்கரை அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக ஆம்புலன்சின் டயர் வெடித்தது. இதில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த ஆம்புலன்ஸ் தாறுமாறாக ஓடி சாலையோரத்தில் இருந்த மரத்தில் மோதியது.
இந்த விபத்தில் ஆம்புலன்சில் இருந்த செல்வி, அம்பிகா ஆகிய 2 பேரும் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். நிறைமாத கர்ப்பிணியான ஜெயலட்சுமி, ஆஸ்பத்திரி ஊழியர்கள் மீனா, தேன்மொழி, டிரைவர் கலிய மூர்த்தி ஆகிய 4 பேரும் பலத்த காயம் அடைந்தனர்.
அந்த வழியாக சென்றவர்கள் விபத்துக்குள்ளான ஆம்புலன்சில் உயிருக்கு போராடி கொண்டிருந்த 4 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், செல்லும் வழியிலேயே ஜெயலட்சுமி பரிதாபமாக இறந்தார். மற்ற 3 பேருக்கும் ஆஸ் பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்து குறித்து கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பிரசவத்துக்காக ஆஸ்பத்திரிக்கு சென்ற நிறைமாத கர்ப்பிணி விபத்தில் இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.