கொரோனா தொற்றுக்கு ஆளாகும் உடல் பருமன் நோயுள்ளவர்களுக்கு, உயிருக்கு அதிக ஆபத்து உள்ளதாக செரிமான நலத்துறை சிகிச்சை நிபுணர் டாக்டர் கே.ஆர்.பழனிசாமி தலைமையிலான மருத்துவர்கள் குழுவினர் கூறினர்.
உடல் பருமன் நோய் தொடர்பாக ஆன்லைன் மூலம் நடந்த கருத்தரங்கத்தில், செரிமான நலத்துறை சிகிச்சை நிபுணர் டாக்டர் கே.ஆர்.பழனிசாமியை ஒருங்கிணைப்பாளராக கொண்ட மருத்துவர்கள் குழுவினர் தங்கள் கருத்துகளை எடுத்துரைத்தனர்.
இந்த நிகழ்ச்சியில் டாக்டர் கே.ஆர்.பழனிசாமி மற்றும் செரிமான நலத்துறை சிகிச்சை நிபுணரான டாக்டர்கள் பி.கே.ரெட்டி, கவுர்தாஸ் சவுத்திரி, வி.பாலசுப்பிரமணியன், பி.பிரமநாயகம் மற்றும் கல்லீரல் சிகிச்சை நிபுணர் டாக்டர் முருகன், டாக்டர் கார்த்திக் ஆகியோர் தெரிவித்த கருத்துகள் வருமாறு:-
ஒரு காலகட்டத்தில் உடல் பருமன் என்பது, செழிப்பான வாழ்க்கையை குறிக்கும் அறிகுறியாகக் காணப்பட்டது. ஆனால் உடல் பருமன் பல்வேறு வகையான புற்றுநோய்கள் உருவாகும் அளவிற்கு கொண்டு சென்றுவிடுகிறது. ஈரலைச் சுற்றி கொழுப்பு சேர்வதன் மூலம் செரிமான பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு வகையான நோய்க்கு ஆளாக வேண்டியதாகிவிடுகிறது.
போர்கள், பஞ்சம் இருந்த காலகட்டத்தில் உடல் பருமன் நோயை காண்பது அரிதாக இருந்தது. ஆனால் இன்று 3 வேளை உணவு மற்றும் பீட்சா, பர்கர் என்ற கொழுப்புள்ள உணவுகளை சாப்பிடுவதால் இந்த நோய்க்கு ஆளாக நேரிடுகிறது.
ஏழைகள் அதிகம் வாழும் ஆப்ரிக்காவில் உடல் பருமன் நோயினால் ஏற்படும் உயிரிழப்புகள் குறைவு. உடல் பருமன் நோயினால், 49 சதவீதம் இருதய நோய்கள், 38 சதவீதம் மூச்சு சம்பந்தப்பட்ட நோய்கள், 19 சதவீதம் புற்றுநோய் ஏற்படுகின்றன.
உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் உள்ளவர்களுக்குத்தான் கொரோனா தொற்று, உயிருக்கு அதிக ஆபத்தை உருவாக்குவதாக ஆய்வு செய்யப்பட்டுள்ளது. ஆனால் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள, உடல் பருமன் நோயுள்ளவர்களுக்கும் அதே அளவுக்கு ஆபத்து உள்ளது. இதற்கான தரவுகள் தற்போது கிடைத்து வருகின்றன. தீவிர சிகிச்சைப் பிரிவு, வெண்டிலேசன் ஆகிய சிகிச்சைக்கு கொண்டு செல்லப்படுவதற்கு இவர்களுக்கு அதிக வாய்ப்பு உள்ளது.
பரம்பரை பிறப்பு, உணவுப் பழக்கம், உடற்பயிற்சி ஆகியவை உடல் பருமனுக்கு மிகுந்த தொடர்புடையவையாக உள்ளன. இந்தியாவைப் பொறுத்தவரை, அதிக கார்போஹைட்ரேட் உணவுகளை சாப்பிடுவதோடு, சோம்பேறித்தனம் அதிகமுள்ள நாடாக விளங்குகிறது. அதிக கொழுப்புள்ள உணவுதான் உடல் பருமனுக்கு காரணம் என்று நினைக்கிறோம். ஆனால் முதல் எதிரி சர்க்கரைதான். ஐஸ்கிரீம், குளிர்பானங்கள், கேக்குகள் உடல் பருமனுக்கு ஏதுவாக உள்ளன.
உடல் பருமனில் இருந்து விடுபட விரதம் இருக்கலாம். சைக்கிளிங், நடைப்பயிற்சி போன்ற உடல் பயிற்சிகளை மேற்கொள்ளலாம். கலோரி குறைவாக உள்ள உணவுகளை மட்டுமே சாப்பிட வேண்டும்.
இவ்வாறு அவர்கள் அறிவுரை வழங்கினர்.