ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான தற்போதைய அரசாங்கத்தை உருவாக்க முன்நின்று பாடுபட்ட பௌத்த தேரர்கள் தற்போது புதிய கட்சி ஒன்றை ஆரம்பிப்பதற்கான முதற்கட்டப் பணிகளை தொடங்கியிருக்கின்றனர்.
ஒன்றிணைந்த எதிரணியின் கோட்டையாக இருந்த கொழும்பு – நாரஹேண்பிட்டி அபயராமய விகாரையிலேயே புதுக்கட்சியை ஆரம்பிப்பதற்கான பேச்சுக்கள் நடத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
கோட்டாபய ராஜபக்ச ஆட்சிபீடம் ஏறி இரண்டு வருடங்கள் பூரணமாகவுள்ள நிலையில் தற்போதைய அரசாங்கத்தை உருவாக்கப் பெரிதும் பாடுபட்ட பிரதான பௌத்த தேரர்கள் கடும் அதிருப்திக்குள்ளாகி வருகின்றனர்.
தங்களது அதிருப்தி நிலையை அவர்கள் பகிரங்க ஊடக சந்திப்புக்களிலும் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் கோட்டா-மஹிந்த அரசாங்கத்தை எதிர்த்து மாற்று வழியொன்றை உருவாக்குவது பற்றிய பேச்சுக்கள் கொழும்பில் நடத்தப்பட்டுள்ளன.
அண்மையில் நடத்தப்பட்ட இந்தப் பேச்சுவார்த்தைக்கு அபயராமய விகாரையின் விகாராதிபதி முருத்தெட்டுவே ஆனந்த தேரர், ஓமல்பே சோபித்த தேரர் உட்பட பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
பௌத்த தேரர்கள் தவிர, நல்லாட்சி அரசாங்கத்தில் பிரபல அமைச்சுப் பதவியை வகித்துவந்த முக்கியஸ்தரும் இதில் கலந்துகொண்டிருப்பதோடு தற்போதைய அரசாங்கத்திலுள்ள ஒருசிலரும் பங்கேற்றியிருப்பதாகவே கூறப்படுகின்றது.
விசேடமாக புதிய கட்சி ஒன்றை ஆரம்பித்து மக்களை அந்தக்கட்சிக்காக வழிநடத்துவதற்கு முதலாவது சந்திப்பில் இணக்கம் எட்டப்பட்டதாக அபயராமய விகாரையின் தகவல்கள் கூறுகின்றன.
இதேவேளை, முருத்தெட்டுவே ஆனந்த தேரர் மற்றும் ஓமல்பே சோபித்த தேரர் ஆகியோர் கடந்த வாரத்தில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்திருந்தனர்.
பிரதமராகவே முன்வந்து இந்த சந்திப்பினை ஒழுங்கு செய்திருந்த அதேவேளை, இதில் அரசாங்கத்தின் மீதுள்ள பல்வேறு குறைபாடுகளை தேரர்கள் சுட்டிக்காட்டியிருக்கின்றனர்.
இருப்பினும் அவற்றை அரச தலைவரை சந்தித்து முறையிடும்படியே பிரதமர் ஆலோசனை வழங்கியதாக தெரிவிக்கப்படுகின்றது.
தற்போதைய அரசாங்கத்தின் நடவடிக்கைகள் பௌத்த பிக்குமார்கள் மாத்திரமன்றி கர்தினால் ரஞ்ஜித் ஆண்டகையும் அதிருப்தியில் இருக்கின்ற நிலையிலேயே மேற்படி புதிய கட்சிக்கான அடித்தளத்தை இடுவதற்கான முதற்கட்ட முயற்சிகளும் இடம்பெற்றிருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
எவ்வாறாயினும் பௌத்த தேரர்களின் இந்தப் புதிய நகர்வு அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், அரசியல் தளத்தில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்வதற்கான தருணங்களாக பார்க்கப்படுகிறது. ஏனெனில், கோட்டாபய அரசாங்கம், பௌத்த தேரர்களில் சொற்களுக்கு செவி சாய்க்கவில்லை என்கிற குற்றச்சாட்டு பரவலாக முன்வைக்கப்படுகிறது.
குறிப்பாக நேற்றைய தினம் செய்தியாளர் சந்திப்பில் பேசிய முருத்தெட்டுவே ஆனந்த தேரர், கடுமையான அதிருப்தியை வெளியிட்டிருந்தார், இதன்போது பேசிய அவர், அரசாங்கம் எந்தக் கொள்கையினை அடிப்படையாகக் கொண்டு செயற்படுகிறது என்பதை அறிய முடியவில்லை.
நாட்டையும், நாட்டு மக்களையும் கடவுள் தான் பாதுகாக்க வேண்டும். தற்போதைய அரசாங்கம் கொவிட் -19 வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்தவும், பொது மக்களின் சுகாதார பாதுகாப்பினை உறுதிப்படுத்தவும் முறையான கொள்கை திட்டங்களை வகுக்கவில்லை.
சுகாதார அமைச்சின் பொறுப்பற்ற செயற்பாட்டை பலமுறை சுட்டிக்காட்டியும் எவ்வித மாற்றமும் இதுவரையில் ஏற்படவில்லை. அரசியல் முரண்பாடுகளை துறந்து அனைத்து தரப்பினரது யோசனைகளையும் ஒன்றினைத்து சிறந்த திட்டத்தை வகுக்குமாறு குறிப்பிட்டுள்ளோம்.
எமது கருத்திற்கு மதிப்பளிக்கப்படவில்லை. தேர்தல் காலத்தில் மாத்திரம் நாம் குறிப்பிட்ட கருத்துக்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டன. அரசாங்கத்தின் மீது நாட்டு மக்கள் கொண்டுள்ள வெறுப்பு நாளுக்கு நாள் அதிகரித்துள்ளதே தவிர குறைவடையவில்லை.
அரசாங்கத்தின் மீது வெறுப்புக் கொண்டிராத பொது மக்களை காண்பது என்பது தற்போது அரிதாகவே உள்ளது. அரசாங்கத்தின் முறையற்ற செயற்பாடுகளை விமர்சித்து பொதுமக்கள் முகப்புத்தகத்தில் விடயங்களை பதிவேற்றம் செய்கிறார்கள்.
பதிவில் எனது பெயரையும் ,புகைப்படத்தையும் இணைத்து ‘ மதகுருவே தற்போது மகிழ்ச்சியா ‘ என பதிவிடுகிறார்கள். பொது மக்களின் இவ்வாறான செயற்பாடுகள் அவர்கள் அடைந்துள்ள ஏமாற்றத்தை வெளிப்படுத்துகிறது என்று தன்னுடைய கடுமையான ஆதங்கத்தை வெளியிட்டிருக்கிறார்.
அதுமாத்திரமன்றி சீனாவின் காலனியாக இலங்கை மாறிக் கொண்டிருக்கிறது என்றும் பரவலாக குற்றச்சாட்டுக்கள் எழுந்திருக்கின்றன.
இச்சூழ்நிலையில் கொழும்பு அரசியல் தளம் சூடானதாக மாறிக் கொண்டிருக்கின்றமை அவதானிக்கத்தக்கது. தேரர்களின் அடுத்தகட்ட நகர்வு எப்படியிருக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.