பல்கலைக்கழக மாணவர்களை கவர விளம்பரத்தில் இடம் பெற்ற 2 பெண்களின் புகைப்படங்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் பலரும் இதை கண்டித்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர்
பீஜிங்:
சீனாவில் நாஞ்சிங் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இது அந்த நாட்டின் முன்னணி பல்கலைக்கழகங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.
அங்கு சீன தேசிய கல்லூரி நுழைவுத்தேர்வு கடந்த திங்கட்கிழமை நடந்தது. அப்போது சமூக வலைத்தளத்தில் நாஞ்சிங் பல்கலைக்கழகத்தின் சார்பில் பெண்களை பயன்படுத்தி, மாணவர்களை கவர்ந்து இழுக்கும் வகையில் விளம்பரம் வெளியிட்டனர். அதில் இடம்பெற்றிந்த 2 புகைப்படங்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி விட்டன. ஏனென்றால் அதில் ஒன்றில் அழகான ஒரு பெண், “காலை முதல் இரவு வரையில் என்னுடன் நூலகத்தில் இருக்க விரும்புகிறீர்களா? ” எனவும், மற்றொன்றில் இன்னொரு பெண் “ நான் உங்கள் இளமையின் ஒரு அங்கமாக மாற விரும்புகிறீர்களா? ” எனவும் கூறும் வாசகங்களைக் கொண்ட அட்டைகளை ஏந்திப்பிடித்திருந்தனர்.
இந்த விளம்பரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பலரும் கண்டித்து சமூக வலைத்தளங்களில் பதிவுகளை செய்தனர்.
ஒருவர், “ஒரு சிறந்த பல்கலைக்கழகமாக மாணவ, மாணவிகளை கவர்ந்து இழுக்க சூடான ஆண்களையும், அழகான பெண்களையும் பயன்படுத்துவதற்குப் பதிலாக தனது வளங்கள் மற்றும் ஆசிரியர்களின் தரத்தின் அடிப்படையில் மாணவர்களை சேர்க்க வேண்டும்” என கூறி இருந்தார். கடுமையான விமர்சனங்களைத் தொடர்ந்து அந்த விளம்பரத்தை நாஞ்சிங் பல்கலைக்கழகம் நீக்கியது.