வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 63 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா அபார வெற்றிபெற்றது.
செயின்ட் லூசியா,
வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 2 டெஸ்ட் மற்றும் ஐந்து 20 ஓவர் போட்டிகளில் விளையாடுகிறது. இதன்படி தென்ஆப்பிரிக்கா- வெஸ்ட் இண்டீஸ் மோதும் முதலாவது டெஸ்ட் செயின்ட் லூசியாவில் கடந்த 10-ம் தேதி தொடங்கியது தொடங்கியது.
டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் கிரேக் பிராத்வெய்ட் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி, முதல் இன்னிங்சை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 97 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணியின் ஹோல்டர் அதிகபட்சமாக 20 ரன்கள் எடுத்தார். சிறப்பாக பந்துவீசிய தென் ஆப்பிரிக்க அணியின் லுங்கி இங்கிடி 5 விக்கெட்டுகளையும், அன்ரிச் நோர்டியா 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இதனை தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய தென் ஆப்பிரிக்க அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 128 ரன்கள் எடுத்திருந்த நிலையில் முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. அந்த அணியின் ரைசி வென் டர் டஸ்சன் 34 ரன்னுடனும் குவிண்டன் டிகாக் 4 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.
இரண்டாம் நாள் ஆட்டம் தொடங்கிய சில நிமிடங்களில் 46 ரன்கள் குவித்த நிலையில் ரைசி டர் டஸ்சன் வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஹோல்டர் பந்துவீச்சில் வெளியேறினார். பின்னர் வந்த வீரர்களும் அடுத்தடுத்து வெளியேறினர்.
ஆனால், மறுமுனையில் குவிண்டன் டிகாக் நிலைத்து நின்று அதிரடியாக ஆடினார். அவர் சதம் விளாசினார். இறுதியில் தென் ஆப்பிரிக்க அணி தனது முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 322 ரன்கள் குவித்தது.
170 பந்துகளில் 141 ரன்கள் விளாசிய டிகாக் கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ஹோல்டர் அதிகபட்டமாக 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனை தொடர்ந்து, தென் ஆப்பிரிக்காவை விட 240 ரன்கள் பின்தங்கிய நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணி தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கியது.
ஆனால், முதல் இன்னிங்சை போலவே இரண்டாவது இன்னிங்சிலும் வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் அடுத்தடுத்து வெளியேறி ஏமாற்றம் அளித்தனர். பிரத்வெய்ட் 7 ரன்னிலும், கிரன் பவுள் 14 ரன்னிலும், ஹோப் 12 ரன்னிலும், மயர்ஸ் 12 ரன்னிலும் வெளியேறினர்.
சற்று நிலைத்து நின்று ஆடிய ரோஸ்டன் அதிகபட்சமாக 62 ரன்கள் எடுத்தார். ஆனால், தென் ஆப்பிரிக்க வீரர்களின் சிறப்பான பந்துவீச்சால் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த வெஸ்ட் இண்டீஸ் 162 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன் மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணியை இன்னிங்ஸ் மற்றும் 63 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென் ஆப்பிரிக்க அணி அபார வெற்றிபெற்றது. தென் ஆப்பிரிக்க வீரர் ரபாடா அதிகபட்சமாக 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இப்போட்டியில் சதம் விளாசிய தென் ஆப்பிரிக்க வீரர் குவிண்டன் டிகாக் ஆட்டநாயகன் விருதை தட்டிச்சென்றார். இரு அணிகளும் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி வரும் 18-ம் தேதி தொடங்க உள்ளது.